2023/2024 ஆம் ஆண்டுக்காக இலங்கை பாராளுமன்றம் மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் இணைந்து பாராளுமன்றத்தில் வழங்கும் புதிய வரையறுக்கப்பட்ட உள்ளிருப்புப் பயிற்சித் திட்டம் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தலைமையில் நேற்று (23) ஆரம்பிக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 48 மாணவர்களைக் கொண்ட குழுவினர் இவ்வருட பயிற்சித் திட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர். புதிய குழுவைச் சேர்ந்த உள்ளிருப்புப் பயிலுனர்கள் மத்தியில் உரையாற்றிய பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன குறிப்பிடுகையில், இலட்சக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இலங்கையில் உள்ள உயரிய நிறுவனத்தில் இவ்வாறு உள்ளிருப்புப் பயிற்சியில் பங்குபற்றக் கிடைத்திருக்கும் வாய்ப்பு அளப்பரியது என்றார். இதற்கமைய, இன்று முதல் அடுத்த 06 மாதங்களில் பாராளுமன்றத்தில் செலவிடும் ஒவ்வொரு நேரத்திலும் பெற்றுக் கொள்ளக் கூடிய அறிவையும், அனுபவங்களையும் உரிய முறையில் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதேநேரம், தாம் பிரதிநிதித்துவம் செய்யும் பல்கலைக்கழகத்தின் கெளரவத்தைப் பாதுகாத்து அவற்றின் பெயர்களை மேலும் வளர்ப்பதற்கு முயற்சிக்குமாறும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்கு பாராளுமன்றத்தின் நடைமுறைகள் மற்றும் அதன் அமைப்புத் தொடர்பில் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து, நிர்வாகப் பணிப்பாளர் ஜீ.தட்சணராணி, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களப் பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா, உணவு வழங்கல் மற்றும் வீட்டுப் பராமரிப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.எச்.எதிரிசிங்க, ஒருங்கிணைப்புப் பொறியியல் திணைக்களப் பணிப்பாளர் பெறியியலாளர் எல்.ரி. அதிகாரி, ஹன்சாட் பிரதிப் பதிப்பாசிரியர் (ஆங்கிலம்) கோகிலா சமரசேகர ஆகியோர் மாணவர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கினர். உள்ளிருப்புப் பயிற்சித் திட்டத்தில் பங்குபற்றும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தை சுற்றிப் பார்ப்பதற்கான ஒழுங்கை தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு அலுவலகம் மேற்கொண்டிருந்தது.
இந்த நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் திணைக்களங்களின் முக்கியஸ்தர்கள், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (NDI) அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.