இலங்கைக்கான தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

இலங்கையின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது அமர்விற்கு இணையாக கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி நியூயோர்க் நகரில் நடைபெற்ற இருநாட்டு தலைவருக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பைப் பாராட்டும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக இருநாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அந்த சந்திப்பு வழி செய்திருந்தாக சுட்டிக்காட்டியுள்ள தென்கொரிய ஜனாதிபதி, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமர்வு நிறைவடைந்து நாடு திரும்பியவுடன் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை முன்னெடுக்கத் தேவையான பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் தென் கொரிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு தென்கொரியா வழங்கியிருக்கும் தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்கவும், காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான இருநாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் விரைவில் கைசாத்திட எதிர்பார்ப்பதாகவும் தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு கட்டமைப்பின் (TIPF) ஊடாக இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

விரிவான பரப்புக்குள் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்பதாக மீண்டும் உறுதியளித்துள்ள தென்கொரிய ஜனாதிபதி, மேலதிகமான பேச்சுவார்த்தைகளுக்காக எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேச எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரிய குடியரசு இந்து – பசுபிக் வலயத்திற்குள் தனது தலையீட்டை மேம்படுத்தி வரும் தருணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையை தென்கொரிய ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

அதேபோல் இலங்கை மக்களுக்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை பாராட்டியுள்ள தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சக்தியையும் நீண்ட ஆரோக்கியத்தையும் வேண்டி பிராத்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன