ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்திய – இலங்கை உறவுகள் மேலும் வலுப்பெற்றதுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் பரந்துபட்ட புரிதலுடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின் வருடாந்த பராமரிப்பு சேவைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் அதற்கு மாற்றீடாக கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானமொன்றை இலங்கை விமானப்படைக்கு கையளிப்பதற்காக இன்று (16) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய கடற்படையின் டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் 2022 ஓகஸ்ட் 15 ஆம் திகதி இரண்டு வருட காலத்திற்கு இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒரு வருடம் தொடர் சேவையை முன்னெடுப்பதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்ததோடு, விமானத்தின் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த விமானத்திற்கு மாற்றீடாக மற்றுமொரு டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,
‘‘நமது அயல் நாடான இந்தியா பெருமளவான உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால உறவு உள்ளது. இலங்கை பொருளாதாரச் சரிவை எதிர்கொண்ட போது இந்தியாவின் நட்புக்கும் அப்பாற்பட்ட சகோதரத்துவத்தை உணர முடிந்தது.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்த இந்திய விஜயத்தின் பலனாக இருநாடுகளினதும் உறவு மேலும் வலுப்பெற்றது. அதற்கமைய எதிர்காலத்திலும் இருநாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்ற தீர்மானித்துள்ளன. தொடர்பு என்பது மிக முக்கியமானதாகும். அது விரிவான அர்த்தத்தை கொண்ட சொற்பதமாகும். அதனை வீதித் தொடர்புகள், மக்கள் இடையேயான தொடர்புகள், பொருளாதார தொடர்புகள், விநியோகத் தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்புகளாக இருக்கலாம்.
கடந்த காலத்தில் கடினமாக நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருந்த போது, எமது கடல்சார் பணிகளுக்கு அவசியமான எரிபொருளை அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நமது விமானப்படைக்கும் கடற்படைக்கும் வழங்கியிருந்தன.
விமானங்கள் மற்றும் மற்றைய இயந்திரங்களையும் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்த நிலையில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மத்தியில் விமானப் படையின் தேவைகளையும் பூர்த்தி செய்வது கடினமாக அமைந்திருந்தது.
புதிய தொழில்நுட்பங்களுக்கு அமைய எமது விமானங்களையும் வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தாலும், எமது பொருளாதாரச் சரிவினால் அதனை செய்ய முடியவில்லை. அந்த வகையில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.
எமது கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிக்கும் போது, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம், ஆயுத கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் முக்கியமானதாக காணப்படுகின்றன. இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள நாடு என்ற வகையில் எமக்கு பெருமளவான பொறுப்புகள் காணப்படுகின்றன.
நாம் முகம்கொடுக்க வேண்டிய சவால்கள் தினமும் மாற்றமடைவதால், எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பணியாற்ற வேண்டும். இலங்கை கடற்படை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலும் தற்போதுள்ள நெருக்கடிகள் இருக்கவில்லை. யுத்த காலத்தில் இலங்கை விமானப் படை மீது சார்ந்திருந்த பணிகள் வேறுபட்டவையாகும். புதிய தொழில்நுட்பம் மற்றும் காலத்துடனான மாற்றங்களுக்கு இணையாக நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும். அந்த நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் ஜனாதிபதியால் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக மணல் வியாபாரத்தை தடுக்கவும் வனவள கட்டமைப்பைப் பாதுகாக்கவும் அவதானம் செலுத்த வேண்டும். எமது நாடு சூரிய சக்தியும் காற்று வலுவும் நிரம்பிய நாடாகும். நாம் அவற்றை பாதுகாக்க வேண்டும். அந்த பணிகளில் படையினருக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.’’ என்று தெரிவித்தார்.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருடன் இந்திய உயர்ஸ்தானிகராலயப் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தன