அற்பதனமான அரசியலுக்காக பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலை தவறாக பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார சபாநாயகரிடம் இன்று (18) காலை கேட்டுக்கொண்டார்.
இன்று பாராளுமன்றம் கூடிய போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாலான பல்வேறு விடயங்களை முன்வைத்து கேள்விகளை முன்வைத்தார். இதன் போது உரையாற்றிய அமைச்சர் இந்த விடயத்தை முன்வைத்தார்.
இந்த அற்ப அரசியலுக்கு பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலை பயன்படுத்துவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் ,இந்த விடயங்கள் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குப் பிறகு விவாதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் ஒழுக்கம் பற்றி பேசினாலும் பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலை தவறாக பயன்படுத்தி ஒழுக்க முறை சீர்குலைக்கப்படுகிறது. எந்த நடைமுறையுமின்றியே இந்த விடயங்கள் இடம்பெறுகின்றன. எந்த அமைப்பும் ஒழுங்கும் இல்லாமல் செய்யப்படுகின்றன. தேசியப் பணிகளைச் செய்யும்போது, நாடாளுமன்றம் மீண்டும் மீண்டும் சிறுமைப்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற விடயங்களைப் பற்றி பேச ஒரு குறிப்பிட்ட நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நடைமுறை உள்ளது. ஒவ்வொரு நாளும் நிலையில் கட்டளை 27யின் கீழ் அல்லது வேறு ஏதாவது ஒன்றின் கீழ் கூச்சல் போட்டு பாராளுமன்ற நேரத்தை வீணடிக்க இடமளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்