கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய முக்கியமான தருணம் வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத் திட்டத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்தால் மாத்திரமே இந்த வேலைத் திட்டத்தை மேலும் விரைவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பதவிகளைப் பெற கனவு காணும் சிலர், நாட்டுக்கு பொய்யான கருத்துக்களை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
யதார்த்தத்தை புறக்கணித்து கனவுகளின் பாதையில் பயணித்தால் நாடு மீண்டும் பெரும் ஆபத்தில் தள்ளப்படும் என வலியுறுத்திய ஜனாதிபதி, பல்வேறு தனிப்பட்ட நலன்களுக்காக நாடு பற்றிய பொறுப்பைப் புறக்கணித்தால் வரலாறு எம்மை துரோகிகள் என பெயரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரை இன்று (07) ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கை விளக்க உரையின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை பிரதமர் தினேஷ் குணவர்தன, சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த் மற்றும் ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் வரவேற்றனர்.
அதன்போது, பாராளுமன்ற பிரதான வாயில் முன்பாக பாடசாலை மாணவிகள் ஜெயமங்கல கீதம் பாடினர்.
படைக்கள சேவிதர், பிரதி படைக்கள சேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம் உள்ளிட்டோர் புடைசூழ பாராளுமன்ற அவைக்குள் பிரவேசித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தில் தனது கொள்கை விளக்க உரையை நிகழ்த்தினார்.
தமது தனிப்பட்ட கனவுக்காக அல்லாமல் நாட்டின் பொதுவான கனவை நனவாக்கும் நோக்கத்திற்காக புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணையுமாறும் ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
தன்னைக் கடுமையாக விமர்சித்த பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானோர் பழைய பகைகளை விடுத்து, நாட்டுக்காக ஒரு பொதுப் பயணத்திற்கு இணங்க முடியுமாக இருந்தால், தம்முடன் நீண்டகாலம் நெருக்கமாகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏன் அவ்வாறு செயற்பட முடியாது என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
விண்கல் வேகத்தில் வீழ்ந்திருந்த இந்நாட்டின் பொருளாதாரத்தை ரொக்கெட் வேகத்தில் மீண்டும் உயர்துவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இது தனித்துவமான வெற்றி எனவும் சுட்டிக்காட்டினார். வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுப்பது மிகவும் சிரமமானதும் கடினமானதுமான பணியாக இருந்தாலும் ஏனைய நாடுகளைப் போன்று நீண்டகால சிரமங்கள் மற்றும் வலிகள் இன்றி, நாட்டை மீட்டெடுக்க முடிந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சிரமத்துடனும் சில சமயங்களில் தயக்கத்துடனும் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களினால் நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பயணம் சாத்தியமாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாகும்போது வரிச் சுமையைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
சிக்கலான மறுசீரமைப்பு திட்டத்தை இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் இது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை அடித்தளமாக அமையும் எனவும், கடனில் இருந்து விடுபடுவதற்கான பாதையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.