அமெரிக்காவுடைய நீதியும், தர்மமும், வஞ்சனமானது- பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றச்சாட்டு

“அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் சென்று இந்த உலகு எதிர்பார்த்தது போன்று காஸா முனையை நோக்கி இஸ்ரேல் தாக்குதலுக்கு இப்பொழுது தயாராகிக்கொண்டுருப்பதை தடுத்து ஒரு யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு உலகத்தில் ஒரு நீதியையும் தர்மத்தையும் ஏற்படுத்துவார் என்ற சிறிதளவு நம்பிக்கை இருந்தது. இன்று அது தவிடு பொடியாகி விட்டது”

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிடுமாறு கோரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அமெரிக்காவுடைய நீதியும், தர்மமும், வஞ்சனமானது. அது இஸ்லாமிய மக்களுக்கு வேறு, உலகத்தில் இருக்கின்ற ஏனைய நாடுகளுக்கு வேறு என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கின்றது.

எனவே தான் உலகப்பாதுகாப்பு சமன்பாட்டில் இன்று ஒரு தேக்கம் ஏற்படுத்தியிருகின்றது. இவ்வளவு காலமும் நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை நீதியையும், தர்மத்தையும் ஏற்படுத்தும் என்று. எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால், இன்று அதுவொரு வெற்றுச்சபையாகி இஸ்லாமிய மக்களுக்கும், பலஸ்தீன மக்களுக்கு எந்த நீதிநியாயத்தையும் வழங்காத ஒரு சபையாக மாறியிருக்கின்ற தருவாயில் உலக இஸ்லாமிய நாடுகளின் அமையம் சவுதியில் கூடியிருக்கின்றது.

பலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை என்பது தற்செயலான இரு நாடுகளுமிடையிலான பிரச்சினையாகப் பார்க்கவில்லை. உலகத்திலிருக்கும் யூத மக்கள் 1895ம் ஆண்டு சியோனிஸ்ட் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி ஒரு நாட்டை உருவாக்க வேண்டுமென்ற ஒரு திட்டத்தை வகுத்தார்கள்.

இதற்கமைய முதலாவது உலக யுத்தத்திற்கு முன்பு உலக முஸ்லிம்களை ஆட்சி செய்த துருக்கிய சாம்ராச்சியம் அன்று பலவீனப்படுத்தப்பட்ட பொழுது அவர்கள் பலஸ்தீன நாட்டை ஆக்கிரமித்து யூத தேசமொன்றை உருவாக்க வேண்டுமென்பதற்காக 1917ம், 1918ம் காலப்பகுதியில் அங்கு பலஸ்தீன முஸ்லீம் மக்கள் இருக்கின்ற அந்த தேசத்தில் யூத மக்களை குடியேற்றி ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை மேற்குலகம் ஆரம்பித்தது.ஹிட்லருடைய இனச்சுத்திகரிப்பு யுத்தம் நடைபெற்ற பொழுது ஜேர்மனியிலிருந்த யூத மக்களை கப்பல்களில் பலஸ்தீன துறைமுகத்துக்கு அனுப்பி அங்கு 1945 காலப்பகுதியில் இஸ்ரேல் என்ற ஒரு தேசத்தை உருவாக்கி வரலாற்று ரீதியாக தேசமாக நாடாக இருந்த பலஸ்தீனத்தை அம்மக்களை அகதிகளாக்கிய பெரும் கொடூரம் இந்த உலகத்தில் நடைபெற்றதை நாங்கள் யாரும் மறுக்க முடியாது.

அவ்வாறானதொரு அநீதியினை ஹிட்லர் ஒரு கொடுமையினைச்செய்த பொழுது அம்மக்கள் யூத மக்கள் குடியேறுவதற்கு பக்கத்திலிருந்த ஐரோப்பிய நாடுகள் பிரிட்டன் போன்ற நாடுகள் இருக்கத்தக்கதாக வேண்டுமென்றே மத்திய கிழக்கில் முஸ்லீம் நாடுகளை அச்சுறுத்துவதற்காக மத்திய கிழக்கில் அமைதியின்மையைக் கொண்டு வருவதற்காக அன்று பலாத்காரமான முறையில் இஸ்ரேல் என்ற தேசம் உருவாக்கப்பட்டதை இன்று வரலாறு கூறுகின்றது.

இஸ்ரேல் என்ற அந்த நாடு தனக்கு அபாயமளித்த பலஸ்தீனை கடந்த 6ம் திகதி மட்டும் அல்ல, கடந்த 80 வருடகாலமாக காலத்துக்குக்காலாம் யுத்தம் செய்து அவர்களுக்கெதிராக வன்முறைகளைத்தூண்டி அம்மக்களை அழித்துக்கொண்டிருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அந்த யுத்தம் உண்மையில் இரு பக்கமும் பொதுமக்கள் கொல்லப்பட்டதை நாங்கள் கவலையோடு பார்க்கின்ற அதேநேரம், மிகக்கொடூரமான முறையில் காஸாவிலிருந்த ஒரு ஆஸ்பத்திரி மீது தாக்குதல் நடத்தி பெரும் ஒரு யுத்தக்குற்றமொன்று இழைக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்று உலக நாடுகளின் புலனாய்வுப் பிரிவினர் காஸா ஆஸ்பத்திரி தாக்குதலுக்கு இஸ்ரேல் என்ற அவர்களுடைய இராணுவப்படை காரணமாக இருக்கின்றது என்று கூறியும் கூட உலகத்தை வழிநடாத்திக் கொண்டிருக்கின்ற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டுருக்கின்றது

உக்ரைன், ரஸ்யா போர் வந்த பொழுது அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டுருக்கின்றார்கள், அநீதி அங்கே நடைபெறுகின்றது என்பதற்காக ரஸ்யா மீது பல பொருளாராத் தடைகளை மேற்கொண்டார்கள். 

பாதுகாப்புச்சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உலக நாடுகள் பல கண்டனத்தீர்மானங்களை நிறைவேற்றியது. உலக குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபருக்கெதிராக பிரேரணையைச் சமர்ப்பித்தது.

இவ்வாறு ரஷ்ய ,உக்ரைன் போரில் உலக நாடுகளின் ஒரு பார்வை வேறு விதமாகவும் அதே நேரம் இஸ்ரேல் பலஸ்தீன யுத்தத்தில் உலக நாடுகளுடைய பார்வை வேறு விதமாகவும் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

அமெரிக்காவுடைய நீதியும், தர்மமும், வஞ்சனமானது. அது இஸ்லாமிய மக்களுக்கு வேறு, உலகத்திலிருக்கின்ற இஸ்லாமிய நாடுகளுக்கு வேறு, என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கின்றது.

எனவே தான் உலக பாதுகாப்பு சமன்பாட்டில் இன்று ஒரு தேக்கம் ஏற்படுத்தியிருகின்றது. இவ்வளவு காலமும் நாங்கள் நம்பி கொண்டுருந்தோம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை நீதியையும் தர்மத்தையும் ஏற்படுத்து மேற்கொண்டது என்று.

ஆனால், இன்று அதுவொரு வெற்றுச்சபையாகி அது இஸ்லாமிய மக்களுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் எந்த நீதிநியாயத்தையும் வழங்காத ஒரு சபையாக மாறி இருக்கின்ற தருவாயில் உலக இஸ்லாமிய நாடுகளின் அமையம் சவுதியில் கூடியிருக்கின்றது.

நாங்கள் வேண்டி நிற்பது அமெரிக்க தலைமையிலான நேட்டோ ஒரு பாதுகாப்பு அரணை அந்தந்த நாடுகளுக்கு ஏற்படுத்தியிருப்பது போன்று ஆசிய நாட்டில், மத்திய கிழக்கில் ஆபிரிக்க நாடுகளுக்கு என்று ஒரு புதிய பாதுகாப்பு ஒழுங்கு உலகில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு இந்தியா ,சீனா, ரஸ்யா மத்திய கிழக்கு நாடுகள் நேட்டோ போன்று ஒரு பாதுகாப்பு அமயத்தை உருவாக்கி உலகத்தில் நீதியையும் தர்மத்தையும் ஏற்படுத்துகின்ற ஒரு புதிய பாதுகாப்பு ஒழுங்கினை இந்த உலகத்தில் ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.

அப்போது தான் மூன்றாம் உலகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு நிம்மதியான நியாயத்தை எதிர்பார்க்க முடியும். இன்று புதிய ஆயுத நவீன ஆயுதங்களைக் கொண்டு இன்று ஒரு பொலிஸ்காரன் போன்று காட்டுமிராண்டிதனம் காட்டுகின்ற இந்த இஸ்ரலை இந்தச்சபையில் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அதே நேரம், சுதந்திர பலஸ்தீனராச்சியம் ஏற்படுத்துவதற்கு இந்தியா வெளியுறவுத்துறை அறிவித்துருக்கின்றது. அது போன்று ரஸ்யா அறிவித்துருக்கின்றது, சீனா அறிவித்திருக்கின்றது. அதே போன்று முஸ்லிம் உலக நாடுகள் அனைத்தும் அறிவித்திருக்கின்றது.

இனியும் தாமதிக்காமல் அமைதியும் ஒழுங்கும் உலகம் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டுமென்றால் பலஸ்தீன மக்களுக்கு அல் அக்ஸா எங்களுடைய புனித தளம் உள்ளடங்கலான ஜெரூஸலம் நகரத்திலுடனான புதிய பலஸ்தீன இராச்சியம் உருவாக்கப்பட வேண்டும்.

இப்புதிய ஒழுங்கில் உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமையம் புதிய பலஸ்தீன இராச்சியத்தை உடனடியாக ஏற்படுத்துவதற்கான காஸா முனைத்தாக்குதலை நிறுத்துவதற்கு இஸ்ரேலை வேண்டிக்கொள்ள வேண்டும் என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன