மன்னார் மாவட்டத்தில் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி அப்பாவி இளைஞர் யுவதிகளிடம் பெருந்தொகை பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
குறிப்பாக மன்னார் மாவட்ட செயலகம், மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் வேலை பெற்று தருவதாக கூறி குறித்த குழுவினர் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
நேற்றும்(06) இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு வேலை பெற்று தருவதாக பணத்தை பெற்றுக் கொண்டு திணைக்களத்தின் உயர் அதிகாரிகளோடு குறித்த மோசடிக்காரர்கள் தொலைபேசியூடாக உரையாடி பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரதேச செயலகங்கள் அரச திணைக்களங்களில் பதவிகளுக்காக எந்த ஒரு நிதியையும் பெற்றுக் கொண்டு பதவிகள் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் உங்களை சந்திக்கும் போது அவர்களுடைய அடையாள அட்டையை உங்களுடைய தொலைபேசியில் பதிவு செய்து கொள்வதுடன் அருகில் உள்ள கிராம அலுவலர்கள் அல்லது பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்குமாறும் தெரிவித்தார்