டிஜிட்டல் கட்டண முறை மூலம் சிறிய ,நடுத்தர வர்த்தகர்களுக்கு பல்வேறு நன்மைகள்

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் QR குறியீடு மூலம் ஒருங்கிணைந்த கட்டண முறை அல்லது UPI அறிமுகப்படுத்திய பின்னர் அது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது.

NPCI International Payments Limited மற்றும் இலங்கையின் LankaPay பிரைவேட் லிமிடெட் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தை விரைவாக விரிவுபடுத்தும் நோக்கத்துடன், 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை இதனுடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படுவதோடு இந்த வசதியை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், 2024 மார்ச் மாத்திற்குள் , இந்த வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை 65,000 ஆக உயர்த்தப்படும் எனவும இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

தமது வங்கிக் கணக்குள்ள நிதி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வதன் மூலம் வர்த்தகம் தொடர்பான QR குறியீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் பணிப்பாளர் (பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகள்) வசந்த அல்விஸ் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்தக் குறியீட்டை வழங்கக் கடமைப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

பெரும்பாலான இந்தியர்கள் QR குறியீடு ஊடாக கொடுப்பனவுகளை செலுத்துவதற்குப் பழக்கப்பட்டிருப்பதால், இந்திய சுற்றுலாப் பயணிகள், இலங்கை முழுவதும் உள்ள வர்த்தக சமூகத்திற்கு பணம் செலுத்துவதற்கு UPI- தொலைபேசி செயலிகளை தடையின்றி பயன்படுத்தலாம்.

ஏற்கனவே உள்ளுர் பரிவர்த்தனைகளுக்கு மிகவும் உகந்த முறைமையான , LankaQR ஊடாக QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கொடுப்பனவுகளை செலுத்த முடியும்.

இதன் மூலம் செலுத்தப்படும் பணம் இலங்கை ரூபாவில் உரிய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உடனடியாக குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும். இவ்வாறான வருமானத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு 06 மாதங்களில் குறுகிய காலத்தில் வங்கிக் கடன்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

இரண்டாவது கட்டத்தில், இந்த கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன், இந்தியாவில் QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதியை இலங்கையர்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

LankaPay இன் தலைவர் கலாநிதி கெனத் டி சில்வா, LankaPay இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சன்ன டி சில்வா, லங்கா LankaQR அமுலாக்கக் குழுவின் சார்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் சிரேஷ்ட உப தலைவர் (டிஜிட்டல் பேங்கிங்) ரண்டில் பொதேஜு மற்றும் பின்டெக் பிரதிநிதியாக LOLC தலைவர் கொண்ராட் டயஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.