சிறந்த விவசாயம், அதி நவீன தொழில் நுட்பம், சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்களைக்கொண்ட நாடு இஸ்ரேல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடு. இந்நாட்டுடன் சண்டையிடும் மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டு வருகிறது.
2012-ஆம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் Observer State’
என்கிற அந்தஸ்தை பெற்றது. இங்கு 90%-க்கும் அதிகமாக இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேற்குக் கரை, காஸா என பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளது. இஸ்ரேலில், கணிசமான அளவில் வாழ்ந்துவரும் அரேபியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அரேபியர்கள் வாழும் பகுதிகளில், இஸ்ரேல் சட்டவிரோதமாகக் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா துணை போவதாக மற்ற இஸ்லாமிய நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. இதன் காரணமாக போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார உறவுகள் என எந்த உறவும் இஸ்ரேலுடன் வைத்துக்கொள்ளாமல் இருந்தன.
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டால் சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டன. 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அப்போது அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனம் வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகிறது கிழக்கு ஜெருசலேமின் பழமையான பகுதியில் அமைந்திருக்கிறது அல் அக்ஷா மசூதி.
இதுதான், இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் ‘வெஸ்ட் வால்’ என்ற ஒரு பக்கச் சுவரை ‘டெம்பிள் மவுண்ட்’ என்று அழைக்கிறார்கள் யூதர்கள். இதைத் தங்களது புனிதத் தலமாகக் கருதுகிறார்கள் அவர்கள். எனவே, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஜெருசலேமையே புனித நகராகக் கருதி வருகின்றன. இரு தரப்பினருக்குமான மோதலுக்கு இதுவே முக்கிய காரணமாக விளங்குகிறது. இந்தநிலையில், 2017-ம் ஆண்டு, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மோதல் மேலும் வலுப்பெறத் தொடங்கியது. நெடும் காலமாகவே கிழக்கு ஜெருசலேமில், அதிக அளவில் வாழும் இஸ்லாமியர்களை வெளியேற்றும் முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி மதப் பிரச்னைகள் ஏற்பட்டு கலவரங்களாக மாறும். குறிப்பாக ரமலான் நெருங்கும் நேரத்தில் அங்கு வன்முறை வெடிப்பது வழக்கம். 1987- ஆம் ஆண்டு பாலஸ்தீன கிளர்ச்சிக்கு பின்னர் தாக்குதல்கள் உக்கிரமாகின.
இந்த இருதரப்புக்கும் இடையிலான பிரச்னையை தீர்க்க நீண்ட நெடுங்காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர்கள் முன்னிலையில் கேம்ப் டேவிட், ஆஸ்லோ என ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால் அந்த ஒப்பந்தங்களின் படி இருதரப்பும் செயல்படவே இல்லை. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலை எதிர்த்துப் போராடி வருகிறது.
இதனை பயங்கரவாத அமைப்பு என நெடுங்காலமாகக் குற்றஞ்சாட்டி வருகிறது இஸ்ரேல். 2006- ஆம் ஆண்டு காசா தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது, பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்தியது. இதன் முத்தாய்ப்பாக, 2012- ஆம் ஆண்டு, வான்வெளி தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் தலைவர் அகமது ஜபாரியை கொன்றது இஸ்ரேல். மேலும், பாலஸ்தீனியர்களின் மசூதியை இடித்ததால் காசா பகுதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என எந்நேரமும் போர் பதற்றத்திலே இருக்கிறது மேற்கு கரை.
பாலஸ்தீனத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் தலைவராக இருந்த யாசர் அராஃபத் 1980களில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க தொடங்கினார். இதனால், அவர் பாலஸ்தீனியர்களுக்கு முழுமையான விடுதலையை பெற்றுத் தர முடியாது என்ற அதிருப்தியில் 1987 பிற்பாதியில் ஹமாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய இரண்டாவது அரசியல் இயக்கமாக ஹமாஸ் இயங்கி வந்தாலும், இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டனை பொறுத்தவரை, அது பயங்கரவாத இயக்கமாக தான் கருதப்படுகிறது.
ஆயுதம் தாங்கி போராடி வந்தாலும், ஹமாஸ் அமைப்பின் பிரதான நோக்கமே இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகளை பரப்புவதும், சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதும்தான். இஸ்லாமியர்கள் இஸ்ரேலில் ஒடுக்கப்படுவதால், தங்கள் எதிர்ப்பை 90களின் முதல் பாதியில் ஹமாஸ் அமைப்பு பதிவு செய்தது. ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் சில ஆயுதம் ஏந்திய போராளி குழுக்களுடன் ஹமாஸ் அமைப்பு கை கோர்த்தது. முழுக்க முழுக்க பாலஸ்தீன விடுதலையை மட்டுமே முன்வைத்து போராடி வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு கத்தார் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆதரவாளர்கள் அதிகம்.
1990களில் கையெழுத்தான ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தை மீறி, யஹ்யா அய்யாஸ் என்ற ஹமாஸ் ராணுவ வெடிகுண்டு நிபுணர் 1995ஆம் ஆண்டு இஸ்ரேலால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் வகையில் 1995ஆம் ஆண்டு இஸ்ரேலில் பேருந்து குண்டுவெடிப்புகள், தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள், தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தியதால் உலகளவில் அறியப்பட்டது ஹமாஸ் குழுகாசாவில் 2005இல் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப்பெற்ற பிறகு, அந்த பகுதியில் ஹமாஸ் அமைப்பு ஆதிக்கம் செலுத்தியது. காசாவில் பிரதானமாக இயங்கி வரும் ஹமாஸ், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை அமைத்தாலும், பாலஸ்தீனத்தில் ஒரு பிரிவினர் ஆதரவும், மற்றொரு பிரிவினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத் மறைவுக்குப் பிறகு, 2006ஆம் ஆண்டு காசா பகுதியில் நடந்த தேர்தலில் ஹமாஸ் அமைப்புக்கு அமோக ஆதரவு கிடைத்தது. ஹமாஸ் அமைப்பின் ராணுவப்பிரிவை இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தன.
இஸ்ரேலின் நடவடிக்கைகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து எதிர்த்து வரும் ஹமாஸ் குழுவினர், கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேலின் மீது அதிருப்தியில் உள்ளனர். 2014ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்புக்கும் – இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்ற உச்சகட்ட சண்டையில், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 2014ஆம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகளாக, இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சிறு சிறு மோதல்கள் நடந்து வந்திருக்கின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு மீண்டும் இவர்களுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்தது. 2021ஆம் ஆண்டு ஹமாஸ்-இஸ்ரேல் ராணுவம் இடையே கடுமையான சண்டை 11 நாட்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.