இரத்தினக்கல் , ஆபரணக் கைத்தொழில் துறை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் துறை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் அண்மையில் (06) கூடிய சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில், இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் துறை வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்தனர்.

அதற்கமைய இந்நாட்டில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான தேசிய கொள்கையொன்றின் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன் வர்த்தக சங்கமொன்று தயாரித்துள்ள தேசிய கொள்கையுடன் தொடர்பான பிரேரணை குழுவில் முன்வைக்கப்பட்டது. அதற்கமைய, அனைத்துத் தரப்பினரதும் உடன்பாட்டில் தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் மான்னப்பெரும ஆலோசனை வழக்கினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், இந்தத் துறையில் காணப்படும் பிரச்சினைகளை இரத்தினக்கல் அகழ்தல், இரத்தினக்கல் வெட்டுதல், மெருகூட்டுதல் மற்றும் பெறுமதி சேர்த்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகள், வர்த்தக மேம்பாடு ஆகிய வகைகளின் கீழ் வகைப்படுத்தி சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் பிரேரணைகள் மற்றும் முன்மொழிவுகளை உள்ளடக்கி முழுமையான அறிக்கையொன்றைத் தயாரித்து அதனை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை, நிதி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் அவதானத்துக்குக் கொண்டுவருமாறு தெரிவித்தார்.

அத்துடன், இரத்தினக்கல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிரமங்கள் தொடர்பில் வருகை தந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர். அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் வாரத்தில் ஒரு நாள் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பிரதேச காரியாலயத்துக்குச் சென்று ஒருங்கிணைப்புடன் அனுமதிப்பத்திரம் வழங்கமுடியுமானால் இந்த செயற்பாட்டை வினைத்திறனாக்க முடியும் என குழுவினால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, தங்கம் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக சுற்றுலாத் துறையை இலக்காகக் கொண்டு ஆபரணக் கைத்தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வருகை தந்த பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்த வர்த்தகர்களால் நாட்டுக்குள் பாரிய அளவு வெளிநாட்டு செலாவணி கொண்டுவரப்படுவதாகவும், தாம் உழைக்கும் அந்நியச் செலவாணியின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி தங்கம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு அரசினால் விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக இந்தத் துறையிலுள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய, இந்த விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவருவதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் துறைக்குள் பிரவேசிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட பிரதேசங்களில் பயிற்சி நிறுவனங்களை அமைத்தல் மற்றும் இத்துறையை பிரபல்யப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வருகை தந்த பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலில் புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்துதல், ஏற்றுமதி செய்யும் போது காணப்படும் சிக்கல்கள், வரி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஒரு அறிக்கையாகத் தயாரித்து பொறுப்பான நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.  

இந்தக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, குழுவின் உறுப்பினர்களான கௌரவ அகில எல்லாவல, கௌரவ வருண லியனகே, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட மற்றும் கௌரவ (வைத்திய கலாநிதி) திலக் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்  கௌரவ சந்திம வீரக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன