தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தைக்கு மனித உரிமைகள் பேரவை பாராட்டு

தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள பேச்சுவார்த்தை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு மகிழ்ச்சியடைவதாக ஆணைக்குழுவின் பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின்  53ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கையை முன்வைத்து கருத்து தெரிவித்த  அவர், தொல்லியல், வனவியல் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவையும் பாராட்டினார்.

இலங்கை மனித உரிமைகள் பேரவைக்கான  புதிய நியமனங்கள் விரைவாக இடம்பெற வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதி உயர்ஸ்தானிகர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அல்லது அதுபோன்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான திட்டங்களை அறிவிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான குழுவும் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடருக்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. கனடா, மலாவி, மொன்டனீக்ரோ, வடக்கு மாசிடோனியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கூட்டாக இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேர்தல் முறைமைகளில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் முன்னெடுப்பதுடன், ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கை தனது ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன