விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்நாட்டின் முதலாவது தேசிய நிலையமான “ஆயத்தி” சிறுவர் பராமரிப்பு நிலையத்தை அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனமாக மாற்றுவதன் அவசியம் தொடர்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துப்புலே தலைமையில் அண்மையில் (07) பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கூடியபோதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
களனி பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான றாகம வைத்திய பீட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தினால் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு பல்வேறு குறைபாடுகளுக்காக மருத்துவ சேவைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அனைத்து விதமான உடல் ரீதியான மற்றும் உள ரீதியான நிலைமைகள் தொடர்பில் ஆரம்பப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, கேட்டல், உடலியல் சிகிச்சை, குடும்ப சிகிச்சை மற்றும் தொழிற் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
“ஆயத்தி” நிலையம் அரச மற்றும் தனியார் பங்குடமையில் செயற்படுவதுடன் களனிப் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட ஊனமுற்றோர் ஆய்வுத் துறையில் உயர்ந்த தகுதி கொண்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் சிகிச்சையாளர்களால் இங்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையத்தினால் இந்நாட்டின் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்குவதுடன், இதுவரை இந்நாட்டின் பிள்ளைகளுக்கு இலகுவாகப் பெற்றுக்கொள்ள இயலாமல் இருந்த பல சேவைகளை வழங்குவதாகவும், இதன் வெற்றிகரமான தன்மைக்கு அமைய நாடு பூராகவும் உள்ள இவ்வாறான தேவையுடைய, ஆனால் செலவுகளை சமாளிக்க முடியாதவர்களுக்கு சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக சுகாதார அமைச்சின் கீழ் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிறுவனத்தை தொண்டு நிறுவனமாக அங்கீகரிப்பதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன், தற்போதைய உண்ணாட்டரசிறை சட்டம் (2017) மூலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நிலையத்தைப் பராமரிப்பதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது கடினமாக உள்ளதாக அதன் தலைவர் களனிப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா சுட்டிக்காட்டினார். விசேடமாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறும்போது தொண்டு நிறுவனமாக ஏற்றுக்கொள்வது முக்கியமானது என பேராசிரியர் தெரிவித்தார்.
“ஆயத்தி” சிறுவர் பராமரிப்பு நிலையத்தை அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனமாக மாற்றுவது தேசிய தேவையொன்றாகக் கருதி அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பேச்சுக் குறைபாடுள்ள சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் ஒவ்வொரு கல்வி வலயத்திற்கும் ஒரு பேச்சு மற்றும் மொழி சிகிச்சை நிபுணர் அல்லது பேச்சு நோயியல் நிபுணரை நியமிக்க வேண்டியது அவசரத் தேவை என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ முதிதா பிரஷாந்தி, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க, கௌரவ ராஜிகா விக்ரமசிங்க, கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய மற்றும் களனிப் பல்கலைக்கழ விரிவுரையாளர்களான சமன்மலி சுமனசேன, கலாநிதி அஷ்வினி பர்னாந்து, மற்றும் ஷிரோமி மசகோராள ஆகியோர் கலந்துகொண்டனர்.