ஜப்பானின் எஹிம் மாகாண எஹிம் ப்ரிஃபெக்சர் (EHIME PREFECTURE) விவசாயத் துறையில் இலங்கையர்களை தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சியாளர்களாக ஈடுபடுத்துவதற்காக ,ஜப்பானின் எஹிம் மாகாணத்திற்கும் இலங்கையின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று ஜப்பானின் எஹிம் நகரில் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி, அமைச்சின் செயலாளர் திரு . ஆர்.பி.ஏ.விமலவீர மற்றும் ஜப்பான் சார்பாக ஆளுநர் டோகிஹிரோ நகமுரா ஆகியோர் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட தொழில்நுட்ப உள்ளக பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு உட்பட்டதாக விவசாயம் மற்றும் ஏனைய துறைகள் போன்றே உணவு பதப்படுத்துதல் தொழில் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த மாநிலத்தில் தற்போது நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் , சிட்ரஸ் என்ற மருத்துவ எலுமிச்சை வகை உற்பத்தி மற்றும் பிற துறைகளில் தொழில்நுட்ப திறன்களை பெற விரும்பும் இலங்கையர்களை தொழில்நுட்ப உள்ளக பயிற்சியாளர்களாக அல்லது விசேட திறன் கொண்ட தொழிலாளர்களாக நியமிக்க இந்த பிராந்திய நிருவாகம் எதிர்பார்த்துள்ளது.
இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் திரு.யோய்ச்சி சுசனகா மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் திரு. ஏ. ஏ.எம். ஹில்மி ஆகியோரும் கலந்துகொண்டனர்.