சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) முழுமையான நிதிப் பங்களிப்புடனும், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (இலங்கை) (NDI) தொழிநுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு ஆதரவுடன் இலங்கை பாராளுமன்றத்தின் சகல துறைசார் மேற்பார்வைக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சம்பந்தப்பட்ட குழுக்களின் தலைவர்கள் மற்றும் அங்கத்துவப் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவொன்று, ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் குழு முறைமை குறித்து ஆய்வு செய்வதற்காக ஒக்டோபர் மாதம் 21 மற்றும் 22ஆம் திகதி அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
ஐக்கிய அமெரிக்க காங்கிரஸில் நீண்டகாலமாகச் செயற்பட்டுவரும் குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய அறிவு மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது, அந்தக் குழுக்களின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துதல் மற்றும் அவற்றின் தொழில்நுட்ப அணுகுமுறைகளை இனங்காணல், அவற்றின் புதிய போக்குகளை ஆய்வு செய்தல் மற்றும் அந்தக் குழுக்களின் பொதுமக்கள் பங்கேற்பு இடம்பெறும் விதம் என்பன தொடர்பில் ஆய்வு செய்வது இந்த ஆய்வு வேலைத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.
அத்துடன், சம்பந்தப்பட்ட குழுக்களின் பணிகளுக்காக மிகவும் ஜனநாயக ரீதியான பிரவேசம் கொண்ட நோக்கமொன்றை விருத்தி செய்தல் மற்றும் அதற்குப் பின்வரிசை உறுப்புநர்களின் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு இந்த ஆய்வு வேலைத்திட்டம் உதவும்.
இந்த ஆய்வுப் பயணத்தில் பாராளுமன்ற செயலகத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.