பலஸ்தீன கமாஸ் விடுதலை அமைப்பு நடத்திய தாக்குதலால் இஸ்ரேலில் சிக்கியுள்ள 15 தமிழர்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.இதனால் தமிழக மாநில அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தால், அங்குள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ள தமிழ்நாடு அரசின் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன வாழ் தமிழர்கள், அவர்களின் குடும்பத்தினர் 1091-87602 48625; 1091-99402 56444; 1091-96000 23645 என்ற தொலைபேசி எண்களிலும் nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையில் உள்ள காசா பகுதி, ஹமாஸ் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குழுவை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு ராணுவம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு இடையே அவ்வபோது தாக்குதல்கள் நடைபெறும். இந்நிலையில், நேற்று (07) அதிகாலை, காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் உதவியுடன் ஹமாஸ் இந்த தாக்குதலை முன்னெடுத்திருப்பதாக இஸ்ரேல்; குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் முழுவதும் அபாய ஒலிகள் ஒலிக்க, போர் சூழல் உருவானதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து காசா பகுதி மீது இஸ்ரேலும் சரமாரி பதில் தாக்குதலை நடத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருக்குமாறும், தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.