தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னைவானிலை ஆய்வு நிலைய பணப்பாளர் பா.செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை அக். 2-ம் திகதி முதல் 6ம் திகதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ,இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று முதல் 4ம் திகதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
செப். 30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் புழலில் 8 செ.மீ.,கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, சென்னை ஆலந்தூர், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.