தமிழகத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோரின் அதிகரித்து வருகிறது. டெங்கு நோய் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து தமிழக மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 21 ஆம் திகதி முதல் 27- ஆம் திகதி வரை ஒரு வாரத்தில் மட்டும் 227 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் நேற்று வரை டெங்கு பாதிப்பு 4 ஆயிரத்து 454 ஆக பதிவாகியுள்ளது.
டெங்கு பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடவும் அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. நாள்தோறும் 20 முதல் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் 600-ஐ தாண்டி பதிவாகி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 866 பேருக்கும், பெபரவரி மாதம் 641 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறையின் தீவிர நடவடிக்கைகள் மூலம் டெங்கு பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குறைந்த அளவில் பதிவாகியது.