தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆர். பி.ஏ. விமலவீர கைது செய்யப்படுவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (31) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹொரணை பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக உரிய சட்டத்தை அமுல்படுத்துமாறு தொழிலாளர் ஆணையாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் அமைச்சின் செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவித்தமைக்காக ஹொரணை நீதவான் நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக அமைச்சின் செயலாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேல்முறையீட்டு நீதிபதிகளான என். பந்துல கருணாரட்ன எம்.ஏ.ஆர். மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நேற்று (31) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது இந்த கைது உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக உள்ள வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலிக்கும் வரை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.