2023 ஜூலை 07ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிர்மாணம், மின்சக்தி மற்றும் வலுச்சக்தி கண்காட்சி 2023இன் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதி உயர் ஸ்தானிகர் திரு வினோத் கே ஜேக்கப் அவர்கள் ஆற்றிய உரை
நிர்மாணம்,மின்சக்தி மற்றும் வலுச்சக்தி கண்காட்சி 2023இன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்கின்றமையை முன்னிட்டு நான் பெருமை அடைகின்றேன். முதலில், இந்த கண்காட்சியை ஒழுங்கமைத்த ஏற்பாட்டாளர்களுக்கு இப்பாரிய முயற்சிகளுக்காக பாராட்டுகள். இக்கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் ஆர்வத்துடன் பங்கேற்பதையிட்டும் நான் மிகவும் பெருமிதமடைகின்றேன், கிட்டத்தட்ட 50 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இவ்வாறு பங்கேற்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளுக்கு சாட்சியமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அரங்கில் வீற்றிருக்கும் மதிப்புக்குரிய பிரமுகர்களே, நண்பர்களே, சீமாட்டிகளே மற்றும் கனவான்களே
இந்திய இலங்கை மக்கள் இடையிலான நெருக்கமான உறவுகள் கடந்த மூன்று வருடங்களில் மிகவும் சிறப்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி நிலை ஆகியவற்றின் மூலமான சவால்கள் ஊடாக இலங்கை பயணித்த காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்தின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அமைச்சுகளுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் உறுதியான ஆதரவை வழங்கியிருந்தது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட தொகையினைக் காட்டிலும் அதிகளவான பெறுமதியாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி மற்றும் மனிதாபிமான ஆதரவு இந்தியாவால் வழங்கப்பட்டிருந்தது. இவ்வருடத்தின் ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதற்காக முதலில் நிதி உத்தரவாதத்தை வழங்கிய நாடு இந்தியா ஆகும். மேலும் ஜப்பான் மற்றும் பரிஸ் கிளப் ஆகியவற்றுடன் இணைந்து கடன் வழங்குனர்கள் சபையின் இணைத் தலைமையாக இந்தியா தொடர்ந்தும் ஆக்கபூர்வமான வகிபாகத்தை வழங்குமென்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் ஜனவரியில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்ஷங்கர் அவர்கள் மேற்கொண்ட வெற்றிகரமான விஜயம் காரணமாக, உட்கட்டமைப்பு, உற்பத்தித்துறை ஆகியவற்றில் முதலீடுகளை மேற்கொள்ளல் மற்றும் தொடர்பாடலை ஊக்குவித்தல் ஆகியவற்றின் ஊடாக மேலதிக ஒத்துழைப்புக்கான வழிவகைகள் தோன்றியுள்ளன. 2022இல் இலங்கையின் பாரிய வர்த்தகப் பங்காளராக இந்தியா பதிவாகியுள்ளது. அத்துடன் இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்காக ரூபாவை பயன்படுத்துவதும் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆணித்தரமான நடவடிக்கைகளாக இருந்துள்ளன.
கடந்த வருடம் இலங்கைக்கு 100,000 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருப்பதன் மூலமாக இலங்கையின் சுற்றுலாத்துறையின் பாரிய மூலாதாரமாக மீண்டும் ஒரு முறை இந்தியா உள்ளதென்பதையிட்டு நான் பெருமகிழ்வடைகின்றேன். அத்துடன் இவ்வருடமும் இப்பட்டியலின் முதலிடத்தில் இந்தியா காணப்படுகின்றது. இலங்கைக்கு வருகைதரும் ஐந்து முதல் ஆறு சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் இந்தியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இரு நாடுகளினதும் மக்கள் இடையிலான நெருக்கத்தினை மேலும் வலுவாக்குவதில் யாழ்ப்பாணம் சென்னை இடையிலான விமான சேவை மற்றொரு படியாகும். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவைகள் இந்த உறவை மேலும் வலுவாக்கும். இந்த விடயத்தில் தொடர்புகள் ஒரு சக்திவாய்ந்த கருவியாக உள்ளன. சுவசெரிய 1990 அம்புலன்ஸ் சேவை, இந்திய வீடமைப்பு திட்டம், பாடசாலைகள் நிர்மாணம் மற்றும் மருத்துவமனைகள் நிர்மாணம், மற்றும் ஏனைய பொருளாதார திட்டங்கள் போன்ற பயன்தரு பொது சேவைகளை வழங்கிய முன்னணி அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையானது மேலேகூறப்பட்ட செயற்திட்டங்கள் மூலமாக முழுமையடைகின்றது.
இந்திய இலங்கை உறவில் அண்மையில் ஏற்பட்டிருந்த அபிவிருத்திகள் எமது நட்பினையும் சகலதுறை ஒத்துழைப்பையும் மேலும் வலுவாக்கியுள்ளன. சமநேரத்தில், குறிப்பாக கடல் மார்க்கமான பாதுகாப்பு விவகாரங்களில் ஏற்படும் பொதுவான சவால்களை முறியடிப்பதில் இரு நாடுகளும் விழிப்புடன் இருக்கின்றன.
இந்த கண்காட்சியில் கலந்துகொள்பவர்கள் இவ்வாறான பின்னணியினை மனதில்கொண்டு இந்திய இலங்கை நட்புறவை மேலும் வலுவாக்குவார்கள் என நான் நம்புகின்றேன். கடந்த 75 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த நட்புறவு தற்போது மிகவும் உயர்வான இடத்தில் காணப்படுகின்றது. மக்கள் மற்றும் வர்த்தக சமூகம் காரணமாகவே இந்த நிலையினை எம்மால் அடைய முடிந்துள்ளது. அத்துடன் சமகாலத்தில் இலங்கையுடன் துணைநிற்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.
நன்றி.
ஊடக அறிக்கை
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு