இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைவதற்கு, உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நாட்டுக்குத் தேவையான பசும் பால் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு நாட்டில் பால் உற்பத்தி இல்லை. தேசிய பால் தேவை நாளொன்றுக்கு சுமார் 20 இலட்சம் லீற்றரகளாகம். ஆனால் 550,000 லிட்டர் பால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் நாட்டின் பால் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
01. இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் (Expressions of Interest) கையொப்பமிடல்
இலங்கையில் பால் உற்பத்திகளின் தரப்பண்பை அதிகரித்தல், பால் உற்பத்தியில் தன்னிறைவடைதல் மற்றும் சிறியளவிலான பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்ற இலக்குகளை அடைவதற்கு இணைந்து செயலாற்றுவதற்காக இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்காக வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த அக்கறை வெளிப்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களும் விவசாய அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.