அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் முரண்படாத வகையில் கிராம சேவகர் சேவையில் உள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகளை முன்வைக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போதுள்ள பிரச்சினைகளை பேசித் தீர்த்து பொதுவான உடன்பாட்டை எட்டுமாறும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
கிராம சேவகர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கிராம சேவகர்களின் தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்ற கலந்துரையாடலில் சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதன்போது கிராம சேவகர் சேவை யாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இங்கு கிராம சேவகர்களின் பதவி உயர்வு தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதால் அவற்றைத் தீர்க்கும் வகையில் குறித்த சேவைக்கான சட்டமூலம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென கிராம சேவகர்களின் சம்மேளனம் வலியுறுத்தியது.
இதன்படி, அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சேவை சட்டமூலத்தில் சாதகமான முன்மொழிவுகள் உள்வாங்குமாறு சாகல ரத்நாயக்க அறிவுறுத்தினார்.
அறுபத்தொரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பழமையான கிராம சேவை என்ற வகையில், அதற்குரிய சேவை சட்டமூலத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கிராம சேவகர்கள் அரசாங்கள் செயற்பாடுகளுக்காக ஆற்றிவரும் பங்களிப்பையும் சாகல ரத்நாயக்க பாராட்டினார்.
இக்கலந்துரையாடலில் பொருளாதார அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள், கிராம சேவகர் சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.