2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஏற்றுமதி பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை விரைவான அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு நான்கு பிரதான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கும் மத்திய வங்கிச் சட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அரச கடன் முகாமைத்துவ சட்டம், அரச நிதிச் சட்டம், பொருளாதார பரிமாற்றச் சட்டம் உள்ளிட்ட சட்டமூலங்கள் இந்த ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்த புதிய சட்டங்களை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்த நாட்டிற்கு கடன் வழங்கிய ஏனைய நாடுகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள சகல நிபந்தனைகளும் எதிர்காலத்தில் சட்டமாக கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.இந்தச் சட்டங்களை நறைவேற்றுவதிலே நாட்டின் எதிர்காலம் தங்கியிருப்பதாகவும் அதற்காக அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
நாடு பொருளாதார ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் இருந்த போது, நாட்டை மீட்பதற்காக அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை உருவாக்கியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டம் இன்று வெற்றியடைந்துள்ளதாகவும், புதிய சட்டங்களை நிறைவேற்றி நாட்டின் எதிர்கால பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிகளவான நிதியை ஒதுக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக மாத்திமே இதனை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
தாதியர் சேவையின் ஸ்தாபகரான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சர்வதேச தாதியர் தினத்தின் கருப்பொருள் ‘நமது தாதியர்கள் – நமது எதிர்காலம், தாதியர் சேவையின் பொருளாதார சக்தி’ என்பதாகும்.
இதேவேளை, இலங்கை தாதியர் பல்கலைக்கழகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டதுடன், அது தொடர்பான நினைவுப் பலகை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்துவைக்கப்பட்டது.
அரச சேவை தாதியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது:
”தாதியர் சேவையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறோம். எமது வணக்கத்திற்குரிய முருத்தொடுவே ஆனந்த தேரரின் பெருமுயற்சியின் விளைவாக இந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த பணியை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இப்பல்கலைக்கழகம் தற்போதுள்ள கட்டிடத்தில் ஆரம்பித்து பின்னர் மேம்படுத்தப்படும்.
எமது வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய அங்கமாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது. தாதியர் சேவை மட்டுமின்றி, இந்தப் பல்கலைக் கழகத்தில் சர்வதேச மொழிகளையும் கற்பிக்க வேண்டும். ஆங்கிலம், ஜெர்மன், ஜப்பான், கொரியன், சீனா உள்ளிட்ட அனைத்து மொழி அறிவும் இங்கு வழங்கப்பட வேண்டும். இந்த அறிவைப் பெற்ற பிறகு, தாதியர்கள் வெளிநாடுகளில் சேவை வாய்ப்புகளைப் பெறலாம். குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கையில் இத்தகைய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாவது அரச ஊழியர்களுக்கு முடிந்த அளவு சலுகைகளை வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு சம்பளத்தை அதிகரிப்பது குறித்தும் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டோம். இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் தான் தொடங்கியது. 2020ல் இருந்து மூன்றரை வருடங்கள் இந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோயால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
மேலும் நாட்டில் போசாக்குக் குறைபாடு அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்பன சில குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, இந்நிலையைக் கட்டுப்படுத்த நிதி ஒதுக்க வேண்டியதாயிற்று. அதற்காக உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமுர்தியை விட மூன்று மடங்கு நிவாரணத்தை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தோம். மேலும், பயனாளிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தனியார் துறையிலும் தோட்டத் துறையிலும் சம்பளத்தை உயர்த்துவதற்கான சமிக்ஞை கிடைத்துள்ளது.
கடந்த சிறுபோகத்தில் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றோம். கடந்த சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தை போன்று இந்த வெசாக் பண்டிகையிலும் அந்தத் தொகையானது சமூக பொருளாதாரத்தில் இணைக்கப்படும். இந்நிலையில் அடுத்த ஆண்டு 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என நம்புகிறோம். அதன் போது மீண்டும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம்.
இது தொடர்பில் தெளிவுடன் செயற்படும் தாதியர் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த ஆண்டு, நாட்டில் பொருளாதாரம் மேலும் முன்னேற்றமடையும். அந்த பொருளாதாரம் வளர்ச்சியை நாம் ஏற்படுத்தாவிட்டால், எம்மால் இந்த இலக்குகளை அடைவது கடினம்.
தற்பொழுது பணத்தை அச்சிட முடியாது. பணத்தை அச்சிட மாட்டோம் என்று சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அப்படியானால் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் தற்போது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து வருகின்றோம். அடுத்ததாக தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவோம். ஆனால் இந்தப் பொருளாதாரப் பிரச்சினை இத்துடன் முடிவடையாது. கடன் தள்ளுபடி செய்தாலும் மிகுதியை மீளச் செலுத்த வேண்டும்.
எனவே, நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு பதிலாக, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும். அந்த நிபந்தனைகளுக்கு நாங்கள் சம்மதித்துள்ளோம். அதிலிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது. அதிலிருந்து விலகினால், இந்த சலுகைகளை இழக்க நேரிடும். எனவே இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நாம் எப்போதும் வரவு செலவுத்திட்ட உபரியை பராமரிக்க வேண்டும். இன்றேல் கடனை மீளச் செலுத்த முடியாது. இந்த அனைத்து முடிவுகளையும் நாட்டுக்காக எடுத்தோம் என்றே கூற வேண்டும். இப்போது நாம் ஏற்றுமதி பொருளாதாரத்துடன் வேகமாக செல்ல வேண்டும். இதற்கான சில சட்டங்களை தயாரித்துள்ளோம். இதில் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்றவை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இவற்றில் முதலாவதாக மத்திய வங்கிச் சட்டத்தை நிறைவேற்றினோம். பணத்தை அச்சிடுவதையும், அரச வங்கிகளில் கடன் பெறுவதையும் இந்தச் சட்டம் தடைசெய்வதோடு அதன் மூலம் மத்திய வங்கிக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. மேலும், 03 சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அரச கடன் முகாமைத்துவச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாம் கடன் வாங்குவதற்கு ஒரு எல்லை உண்டு. அப்படியானால், பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன்களைப் பெறுவதற்கும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் அந்தச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும்.
மேலும், அரச நிதிச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை வரை, FR இன் படி பணம் கட்டுப்படுத்தப்பட்டது. சட்டத்தின் மூலம் பணத்தை கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கப் பணப் புழக்கம், வருவாய் சேகரிப்பு மற்றும் பண விநியோகம் ஆகியவை எதிர்காலத்தில் இந்த புதிய சட்டத்தின்படி இருக்கும்.இந்த புதிய சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
பாராளுமன்றத்தின் வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். திறைசேரிக்கு மேலதிகமாக, பாராளுமன்றத்திற்கு சுயாதீன அறிக்கைகளை வழங்குவதற்கு ஒரு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனங்கள் இந்த இரண்டு சட்டங்களின் கீழ் செயல்படுகின்றன.
பொருளாதார பரிமாற்ற சட்டத்தையும் நாங்கள் முன்வைக்கிறோம். இந்த நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதாரமாக மாற்றப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் நாங்கள் சட்டமாக கொண்டு வருகிறோம். இந்த சட்டத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் நமது நாட்டின் எதிர்காலம் இந்த சட்டங்களில் தங்கியுள்ளது.
குறிப்பாக இன்று நமது சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. நம் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்க பாடுபட வேண்டும். அதற்கு வேகமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஏனைய கட்சிகளை இணைத்து ஆட்சியை உருவாக்கினோம். இன்று நாம் அதை நிறைவேற்றியுள்ளோம். இப்போது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் இந்த 03 பிரதான சட்டங்கள் முன்வைக்கப்பட்டு ஜூன் மாதம் விவாதம் நடத்தப்படும். இதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.இதற்கான மாற்று வழியை யாரும் முன்வைக்கவில்லை. அப்படியானால், இந்த புதிய சட்டங்களை அனைவரும் ஏற்றுக்கொண்டு நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுப்போம்’’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.”