ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபை ஸ்தாபிக்கப்படும் -ஜனாதிபதி.

ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கம் , அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இன்று (06) நடைபெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

உள்நாட்டு மருத்துவம் தொடர்பிலான ஆய்வுகளும், அதன் வரலாறுகள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த துறையை மேலும் முன்னோக்கி கொண்டுச் செல்வோம்.

இதற்காக பாரம்பரிய வைத்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே சமயம் ஜோதிடத்தையும் இதனுடன் இணைக்க வேண்டும்.

இந்தப் பணிகளை முன்னெடுக்க ஆயுர்வேதத் திணைக்களம் மாத்திரம் போதாது. ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை நிறுவுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நீண்ட காலத் திட்டங்களையும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் வகுக்க எதிர்பார்க்கிறோம்.

ஆயுர்வேத மருத்துவத்திற்கு, மருத்துவ அறிவியலாக அங்கீகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். நமது சுதேசவைத்திய முறையின் அறிவியல் அடிப்படையைக் கண்டறிந்து செயற்படுவது மிகவும் முக்கியம். அதற்காக ஆராய்ச்சிகள் அவசியம். மேலும், சுற்றுலாத்துறைக்காக இத்துறை, நவீனமயமாக்கப்பட்டு பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தாய்லாந்து போன்ற நாடுகளில் பாரிய ஹோட்டலுக்குச் செல்லும்போது, ​​அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம். இதே திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும். எனவே, சுற்றுலாத் துறையில் ஆயுர்வேத மருத்துவம் சேர்க்கப்பட வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுகிறது. இன்று சென்னை போன்ற நாடுகளில் ஜோதிட முறையும் உருவாகியுள்ளது. இந்த மரபுகள் அனைத்தையும் இணைத்து இந்தத் துறையை நாம் முன்னேற்ற வேண்டும்.அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இந்த சபையை நிறுவுவது அவசியமாகும்” என மேலும் ஜனாதிபதி தெரிவித்தார்.