சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மீறப்படுமானால் நாடு பின்னோக்கிச் செல்லும். எனவே அந்த உடன்படிக்கைகள் அனைத்தையும் அமுல்படுத்த, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமாக பேணுவதற்கு பல பொருளாதார இலக்குகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும், அந்த இலக்குகளை மீறுவது நாட்டின் பொருளாதாரத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அரசியல் இலாபத்திற்காக மேடைகளில் வீணாகப் பேசிக் கொண்டிருக்காமல் நடைமுறையில் இருக்கும் கட்டமைப்பிற்குள் மாத்திரம் பேசுவது எதிரணியின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டிற்கான பொறுப்புகளை ஏற்காமல், சம்பிரதாய அரசியலில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த சவாலை அச்சமின்றி ஏற்றுக்கொண்டதால் , அரசாங்கம் அதன் வெற்றிகரமான முடிவுகளை இன்று வெளிப்படுத்தியுள்ளதாகவும், எனவே நாட்டு நலனுக்காக அனைவரையும் ஒரே பாதையில் பயணிக்க அழைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான “உறுமய” முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கல் மற்றும் அரிசி மானியம் வழங்கும் நிகழ்வு கரவனெல்ல ஸ்ரீ விசுத்தாராமவில் இன்று (04) நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
“உறுமய” நிரந்த காணி உறுதிப் பத்திரம் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக கேகாலை மாவட்டத்தில் 350 காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கினார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 800 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
”உறுமய காணி உறுதிப் பத்திரத்தின் ஊடாக உங்கள் உரிமை உங்களுக்கு வழங்கப்படுவதாக நான் கருதுகிறேன். இந்த உரிமையை மக்களுக்கு வழங்க முந்தைய அனைத்து அரசுகளும் தவறிவிட்டன. அதற்கான முறையான கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் வெள்ளையர் எந்த சட்டத்தின் மூலம் நிலத்தை கையகப்படுத்தினார்களோ அந்தச் சட்டத்தின்படியே நாட்டு மக்களுக்கு நில உரிமைகளை வழங்கியுள்ளோம். இந்த நிலத்தைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும்.
இந்த அரசாங்கம் சாதாரண அரசாங்கம் அல்ல. இது ஒரு கட்சியால் உருவாக்கப்பட்ட அரசாங்கமுமல்ல. இந்த அரசாங்கத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் இன்று நாம் ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுள்ளோம். அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்த குழுதான் எதிர்க்கட்சி. அதுதான் எமக்கிடையிலுள்ள வித்தியாசம். அன்று நாட்டில் நிலவிய நிலைமையை நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இன்று இந்த நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம். அந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவர 4-5 வருடங்கள் பிடிக்கும் என்று பலர் நினைத்தனர். ஆனால் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இரண்டே ஆண்டுகளில் மீண்டு வர முடிந்தது.
இன்று, நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்துள்ளது. தற்போது நாட்டிலுள்ள வறுமையை குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தாமல் வறுமையை ஒழிக்க முடியாது.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான இலக்குகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்களை எட்டியுள்ளோம். 2027ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக உயர வேண்டும். எதிர்காலத்தில் இது 8 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். 2025இற்குள் வேலையின்மை 5% ஆகக் குறைக்கப்பட வேண்டும். மேலும், வறுமையை 2027இல் 25%-15% ஆகவும், 2035இற்குள் 10% ஆகவும் குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.
இந்தப் பணியை முன்னெடுப்பதாக நாம் அறிவித்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு முழு ஆதரவை அளித்துள்ளது. மேலும், நாங்கள் பெற்ற வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை எளிதுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த செயற்பாட்டை மீறினால் நாடென்ற வகையில் பின்னோக்கி சென்று விடுவோம். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இழக்க நேரிடும். ஏனெனில் இலங்கை பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகளை அளித்து அவற்றை மீறியுள்ளது.
எனவே, இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டு, பொருளாதார பரிமாற்றச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு நமது பொருளாதார இலக்குகள் மற்றும் ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக்குகிறது. எமக்கு கடன் வழங்கிய நாடுகள் இலங்கை இந்தத் திட்டத்தைத் தொடரும் என்பதில் திருப்தியடைந்துள்ளதால் அவர்களின் ஆதரவை நாங்கள் பெறுகிறோம்.
எனவே இதை எங்களால் மாற்ற முடியாது. தற்போது இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, அரசியல் மேடைகளில் வீண் பேச்சு பேசுவதில் அர்த்தமில்லை. நாம் எது செய்வதாக இருந்தாலும் இந்தக் கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும். எனவே, பொறுப்புகளை ஏற்காததால் தான் நீங்கள் எதிர்க்கட்சிக்கு சென்றீர்கள் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு கூற விரும்புறேன். சம்பிரதாய அரசியலில் ஈடுபட்டதாலே அந்த நிலை வந்தது. சவால்களை அச்சமின்றி ஏற்றுக்கொண்டதால்தான் இன்று ஆட்சியில் இருக்கிறோம். இப்போது நாங்கள் பெறுபேறுகளைக் காட்டியுள்ளோம். ஒரே பாதையில் ஒன்றாக பயணிக்க முன்வருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.