புதிய மதுபான உரிமங்களை வழங்குவதற்கு அடிப்படையான காரணிகள்

நண்பர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை எனவும், எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது பொல் மதுபான அனுமதிப்பத்திங்கள் கோரி விண்ணப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கப்படுமாயின் எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் எத்தனை எம்.பி.க்கள் மிச்சமிருப்பார் என கூற முடியாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கடந்த 16 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2008 ஆம் ஆண்டு பதிவான சனத்தொகைக்கு ஏற்ற வகையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட போதிலும், 16 வருடங்களின் பின்னர் சனத்தொகைக்கு ஏற்ற வகையில் கணக்கிடப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், சட்டவிரோத மதுவை தடுக்கும் நோக்கில், இந்த புதிய கணக்கீடுகளின்படி மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சட்டப்பூர்வ மது பாவனையை அதிகரிக்க அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது எனவும், வரிகளை அதிகரிப்பதன் மூலமும், புதிய உரிமக் கட்டணங்களை விதிப்பதன் மூலமும் மதுபானத்தின் விலையை அதிகரிப்பதன் மூலம் அதை கட்டுப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஆகவே, சட்டவிரோத மதுபானம் பரவுவதை கட்டுப்படுத்தி அரச வருவாயை அதிகரிக்கவே அரசாங்கத்தின் நோக்மே என்றும் குறிப்பிட்டார்

எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு அமைவாக மதுபான அனுமதிப்பத்திரங்கள் கோரி விண்ணப்பித்த நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகள் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.