பொருளாதார ஸ்திரத்தன்மையால் துறைமுக நகரத்தின் நிதி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிந்தது.

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘The Mall’ வரியில்லா வர்த்தக தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05) திறந்து வைத்தார்.

இதற்குள் One World, China Duty Free Group (CDFG) மற்றும் Flemingo ஆகியவை இந்த வர்த்தகத் தொகுதியில் தங்கள் செயல்பாடுகளைத் ஆரம்பித்திருப்பதன் மூலம், கொழும்பு துறைமுக நகரம், பிராந்தியத்தில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத் தொகுதியாக பரிணமிக்கும்.

துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என ​​இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அரசாங்கம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியமையினால் இன்று துறைமுக நகரின் நிதிச் செயற்பாடுகளை தொடங்க முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இன்று துறைமுக நகரத்தில் இந்த வரியில்லா வர்த்தக தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளமை மிக முக்கியமானதாகும். இலங்கையின் சுற்றுலா துறை உலக அளவில் பிரசித்தம் பெற்றுள்ளது. இந்த வர்த்தகக் கட்டிட தொகுதி இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் வணிக வளாகங்களை நிர்மாணித்து இந்த துறைமுக நகரத்தை மேம்படுத்தியுள்ளோம். இது துறைமுக நகரத்தின் ஆரம்பமாக மட்டுமே அமையும்.

துறைமுக நகரை இவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் எமக்கு இருக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியதன் காரணமாகவே இன்று இப்பணியை செய்ய முடிந்துள்ளது.

குறிப்பாக 100 நிறுவனங்கள் இன்று துறைமுக நகரம் குறித்து கவனம் செலுத்தியுள்ளன. அதில் 74 நிறுவனங்கள் இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளன.

எனவே நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து முன்னேறி இந்த துறைமுக நகரை உலகப்புகழ் பெற்ற மையமாக மாற்றுவோம் என மேலும் ஜனாதிபதி தெரிவித்தார் .