கிளப் வசந்த கொலைக்கு உதவிய மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்

கிளப் வசந்தவின் கொலை தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்ய வந்த குழுவினருக்கு தங்குமிட வசதி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 08 ஆம் திகதி அத்துருகிரியில் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவை சுட்டுக் கொன்றதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி ஒருவரும் துப்பாக்கிதாரிகள் வந்த காரின் சாரதியையும் நேற்று (28) இரவு பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

காலி, நாகொடை மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களைச் சேர்ந்த 29 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 32 வயதான ‘பொடி பலயா’ என்ற சஜித் ஸ்ரீயந்த டி சில்வா என பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியாக செயற்பட்டுள்ளவர் பைரவாயா என்ற மதுஷங்க டி சில்வா எனவும் தெரியவந்துள்ளது.

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் தங்கியிருந்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தற்போது அத்துரிகிரிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கிளப் வசந்த கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றைய நபரும் கடந்த 23ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது