மக்களின் வறுமையை ஒழிப்பதன்றி, அவர்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களை வளப்படுத்துவதே தமது கொள்கை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வவுனியா, மதவச்சியில் நேற்று (10) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வறிய கிராமங்களுக்கு பதிலாக செழிப்பாக கிராமங்களை உருவாக்கி அநுராதபுரத்தில் அரசர்கள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவை மீண்டும் ஏற்படுத்த வழி செய்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
அதற்காக விவசாயிகளைப் பலப்படுத்தும் வேலைத் திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவிருப்பதோடு, இம்முறை ஜனாதிபதி தேர்தல் கட்சியொன்றின் வெற்றியை தீர்மானிப்பதாக அன்றி நாட்டின் வெற்றியைத் தீர்மானிப்பதாக அமையும் என்பதால் கட்சி வேறுபாடுகளை விடுத்து நாட்டின் வெற்றியை உறுதி செய்ய ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
நாம் தொடர்ந்தும் வறிய நாடாக இருக்க முடியாது. நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். நாட்டின் இறக்குமதிக்கு செலுத்த போதுமான நிதி இல்லை. எனவே ஐ.எம்.எப் அமைப்பும் உலக வங்கியும் கடன் வழங்கும் 18 நாடுகளும் எமக்கு உதவ முனவந்துள்ளன. ஆனால் கட்டாயமாக நாம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
அதனை செயற்படுத்தவே இயலும் ஸ்ரீலங்கா திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம். நாம் வரி அதிகரிப்பு என்ற கஷ்டமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது. அனைவருக்கும் அதன் சுமை தெரிந்தது. ஆனால் 6 மாதங்களில் ரூபாவின் பெறுமதி அதிகரித்து பொருட்களின் விலை குறையவும் வழி ஏற்பட்டது.
அதனால் தற்போது மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கிறது. அது போதுமானதல்ல. அடுத்த வருடத்தில் மேலும் பல சலுகைகளை மக்களுக்கு வழங்குவோம். குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண திட்டங்களும் தொடர்ச்சியாக வழங்கப்படும். அரச ஊழியர்கள் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உறுமய திட்டத்தில் பெருமளவானர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படும். மக்களை கஷ்டத்திலிருந்து மீட்க விவசாய நவீனமயப்படுத்தல் திட்டத்தை செயற்படுத்துவோம்.
அனுராதபுரத்தை தம்புள்ளை போன்ற கலாச்சார மையமாக மாற்றுவோம். புதிய பொருளாதாரத்துடன் மாற்றத்தை ஏற்படுத்தவே நாம் வாக்கு கேட்கிறோம்.
அரசியல் குரோதங்களை கைவிடுங்கள். மக்கள் பசியை போக்க அனைவரும் ஒன்றுபட வேண்டியதே காலத்தின் தேவையாகும். எனவே எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.