அரசியல் கட்சிகள் நாட்டுக்காக கைகோர்த்துச் செயற்பட முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம்.

நாட்டுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை தற்போதைய அரசாங்கம் நிரூபித்துள்ளதாகவும், அதன்படி புதிய இலங்கையை உருவாக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வாக்குகளை திருடும் நிலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி தள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஜேவிபி கடந்த காலத்தை மறந்துவிட்டது என்றும், கடந்த காலத்தை மறந்துவிட்டு எதிர்காலத்திற்கு செல்ல முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்ல மொனார்ஷ் இம்பீரியல் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களில் வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்து பேசிய ஜனாதிபதி

கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தினோம். தற்போது நாட்டை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டிற்காக அர்பணிப்புடன் செயற்படத் தயாராக இருக்கிறோம். சிலர் நாட்டைப் பற்றி பேசினாலும் தங்களது சுயநலத்தை பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். நாங்கள் நாட்டைப் பற்றி பேசுகிறோம், நாட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். தற்போதைய எமது போராட்டமும் புதிய இலங்கையை உருவாக்குவதற்கானதாகும்.

நாட்டுக்காக அரசியல் கட்சிகளாக ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை காண்பித்துள்ளோம். அந்த மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்காக நாங்கள் பாடுபடுகிறோம். இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உருவாக்கவே அந்த போராட்டத்தை நாங்கள் செய்கிறோம். இந்த நாடு எப்போதும் பிச்சை எடுக்கும் நாடாக இருக்க முடியாது. அந்நியச் செலாவணியை எப்போதும் பிற நாடுகளிடம் கோர முடியாது. நமக்குத் தேவையான பணத்தைக் தேடிக்கொள்ள வேண்டும். நாட்டில் வலுவான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். அந்த பொருளாதாரத்தினூடாக இந்நாட்டு மக்கள் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும்.

விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ஏற்கனவே கிராமங்களை சென்றடைந்துள்ளது. அதன் பரீட்சார்த்த பணிகளை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்கனவே ஆரம்பித்துள்ளார். மேலும், சுற்றுலாத்துறை மேம்பாட்டையும் கிராமங்கள் வரையில் கொண்டுச் செல்வோம். சுற்றுலா பயணிகளின் வருகையும் இரட்டிப்பாகும். இதனால் கிராமங்களுக்கும் பணம் வந்து சேரும். சூரிய சக்தி மின் உற்பத்தியையும் கிராமங்களுக்கு கொண்டுச் செல்வோம். இவற்றோடு புதிய முதலீட்டு வலயங்களையும் உருவாக்கி நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வோம் என ஜனதிபதி
தெரிவித்தார்