கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வரிசை யுகத்தை நிறைவு செய்து, வாழ்க்கைச் சுமையை குறைத்து, வரிச் சலுகைகளை வழங்கி, இந்த நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிட்ட தனக்கு தேர்தலில் போட்டியிட உரிமை இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இன்று (01) காலை நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க :
நாம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ள நிலையில் அதனை மேலும் ஸ்தீரப்படுத்தவே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன். எந்தநாளும் கடன்பெற்றுக் கொண்டிருக்க முடியாது. எனவே ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேம்படுத்தி வெளிநாட்டு செலாவணி மிகையை ஏற்படுத்த வேண்டும். வீடு உடைந்து விழுந்தால் என்ன செய்வீர்கள். அதனை வலுவான அடித்தளத்துடன் கட்டியெழுப்ப வேண்டும். அடித்தளத்தில் உள்ள குறைபாடுகளை சீர்செய்ய வேண்டும். அதனால் தான் இப்பணிகளை நிறைவு செய்வதற்காக நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். IMF, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களினதும் 17 நாடுகளினதும் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளோம். அதில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றன. நிலையான கட்டிடமொன்றை கட்டியெழுப்பவே நான் போட்டியிடுகின்றேன்.
5 வருடங்கள் தான் ஆட்சிப் பொறுப்பைக் கேட்கிறேன். 4 வருடத்தில் அந்தப் பணிகளை நிறைவு செய்வேன். வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் வாழ்க்கைச் செலவு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது, வரி நிவாரணம் வழங்குவது, அதிகளவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது, பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவது,’உறுமய’, ‘அஸ்வெசும’ என்பவற்றை தொடர்வது என்பனவே எனது இலக்குகளாகும்.
2024 இல் மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செலவு மேலும் குறையும். 2019 இல் வரியைக் குறைத்ததால் உரம் இல்லாத நிலை ஏற்பட்டது. அந்த நிலைக்கு மீண்டும் செல்ல வேண்டுமா? கடந்த 4 வருடங்களாக தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அடுத்த வருடம் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை உருவாக்குவோம் என மேலும் ஜனாதிபதி தெரிவித்தார்.