அல்சைமர் நோய் மற்றும் ஏனைய வகையிலான டிமென்ஷியாவுக்கான ஆபத்துக்கள் வயது மூப்புக்கு ஏற்ப அதிகரித்துள்ளன. வயது வந்தவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவரும் பிராந்திய நாடுகளில் ஒன்று என்ற ரீதியில் 2050ஆம் ஆண்டாகும்போது இலங்கையில் அரை மில்லியன் பேர் டிமென்ஷியா நோயுடன் இருப்பார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
டிமென்ஷியா குறித்தும் அதனால் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் விழிப்புணர்வூட்டும் வகையில் சர்வதேச அல்சைமர் நிறுவனத்தினால் செப்டெம்பர் மாதம் உலக அல்சைமர் மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு சர்வதேச ரீதியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் உலக சமூகத்துடன் லங்கா அல்சைமர் அறக்கட்டளையும் கைகோர்த்துள்ளது.
இது அறிமுகப்படுத்தப்பட்டு 14 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் “டிமென்ஷியா பற்றிக் கேளுங்கள், அல்சைமர் பற்றிக் கேளுங்கள்” என்ற தொனிப்பொருளை உலக அல்சைமர் மாதம் வலியுறுத்துகின்றது. உலகம் முழுவதிலும் 55 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான தகவல்களைத் தேடுவது, இது பற்றிய மௌனத்தைக் கலைத்து கேள்விகள் கேட்கப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்தொனிப்பொருளின் கீழ் அல்சைமர் மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சுகாதாரமான வாழ்க்கை முறையின் ஊடாக டிமென்ஷியாவினால் பாதிக்கப்படும் சம்பவங்களில் பாதியை தடுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ முடியும் என ஆய்வுகள் காண்பிக்கின்றன. வயது மூப்பினால் டிமென்ஷியா ஏற்படுகின்றது என்ற தவறான அபிப்பிராத்தை 65வீதமான சுகாதாரத் துறையினரும், 80 வீதமான பொதுமக்களும் இன்னமும் நம்புவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் உடல் மற்றும் உள நலனை ஊக்குவிப்பதற்காக லங்கா அல்சைமர் அற்கட்டயை இந்த செப்டெம்பர் மாதத்தில் இரண்டு பிரதான சமூக நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
ஞாபத்திற்கான ஓட்டம் – மூளையின் ஆரோக்கியத்திற்கு உடல் ரீதியான செயற்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 5 கிலோ மீற்றர் தூரத்திற்கான ஓட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு செப்டெம்பர் 13ஆம் திகதி பி.ப 4.30 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.
ஞாபத்திற்கான நடைபயணம் 2025 என்பது டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வூட்டும் நிகழ்வாகும். இந்த நடைபயணம் செப்டெம்பர் 27ஆம் திகதி மு.ப 7.30 மணிக்கு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமாகும். நுழைவு ரூ.300 விலையிடப்பட்ட சீட்டிழுப்பின் மூலமாகும்.
அல்சைமர் மாதத்தின் நிகழ்வுகள் பல்வேறு ஆதரவாளர்களின் பெருந்தன்மையால் சாத்தியமாகியுள்ளது. இதில் கோல்ட் அனுசரணையாளர்களாக ADZ இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் (பிரைவட்) லிமிடெட், ஜனசகக்தி இன்ஷூரன்ஸ், MTV, விஜயா நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் ஹாய் ஒன்லைன், தாஜ் சமுத்திரா ஹோட்டல் மற்றும் சினமன் கிராண்ட் கொழும்பு போன்றவை இணைந்துகொண்டுள்ளன.
“இந்த நிகழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையை நோக்கியதாக அமையும்” என லங்கா அல்சைமர் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் ஷெஹான் வில்லியம்ஸ் தெரிவித்தார். “டிமென்ஷியா பற்றிய கேள்விகள் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடல்களில ஈடுபடுவதன் ஊடாக, நாம் அதனைச் சூழ்ந்துள்ள தாழ்வு மனப்பான்மையை குறைக்கவும், சரியான நேரத்தில் நோயறிதலை ஊக்குவிக்கவும், குடும்பங்கள் தேவையான சிகிச்சை மற்றும் ஆதரவைக் கேட்டு பெற வலிமையூட்டவும் முடியும்” என்றார்.
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மூன்று செக்கனுக்கு ஒரு முறையில் யாருக்காவது டிமென்ஷியா ஏற்படுகின்றது. டிமென்ஷியாவுடன் வாழுவோரின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டாகும் போது 78 மில்லியனாகவும், 2050ஆம் ஆண்டாகும் போது 139 மில்லியனாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிராந்தியத்தில் மிக வேகமாக முதியோர்கள் அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகின்றது. 2035 ஆம் ஆண்டிற்குள்,ஒவ்வொரு நால்வரில் ஒருவருக்கு 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டிமென்ஷியா ஒரு கடுமையான பொதுச் சுகாதாரச் சிக்கலாக அமையும்.
லங்கா அல்சைமர் அறக்கடடளை என்பது, இலங்கையில் அல்சைமர் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உரிமைக்கான நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது சட்டப்பூர்வமற்ற நிறுவனம் ஆகும். இது அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. சுகாதார சேவைகள் அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள லங்கா அல்சைமர் அறக்கட்டளை, இலவசக் கல்வி, பராமரிப்பு மற்றும் ஒத்துழைப்பு சேவைகளை வழங்கும் அதேநேரம, டிமென்ஷியா தொடர்பில் காணப்படும் அவப்பெயர் மற்றும் தவறான தகவல்களை நீக்குவதற்காகவும் தீவிரமாகவும் செயற்பட்டு வருகின்றது.
சமூக ஊடகங்களில் #AskAboutDementia, #AskAboutAlzheimers, மற்றும் #WorldAlzMonth போன்ற ஹாஷ்டக்ஸ்களைப் பயன்படுத்தி ஞாபகத்திற்கான ஊட்டம் மற்றும் ஞாபகத்திற்கான நடைபயணம் என்பவற்றில் இணைந்துகொள்ளுமாறு லங்கா அல்சைமர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.