பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி ஓவரில் 4 விக்கெட்களால் வென்றது சென்னை சுப்பர் கிங்ஸ்

ஐபிஎல் வரலாற்றில் தலா 5 தடவைகள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸுக்கும் மும்பை இண்டியன்ஸுக்கும் இடையில் சென்னை சேபாக்கம், எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 5 பந்துகள் மீதம் இருக்க சென்னை சுப்பர் கிங்ஸ் 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் ருத்துராஜ் கய்க்வாட், ரச்சின் ரவிந்த்ரா ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

மும்பை சார்பாக அறிமுக பந்துவீச்சாளர் விக்னேஷ் புதூர் மிகத் துல்லியமாக பந்துவீசி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்த போதிலும் மும்பை இண்டியன்ஸின் தோல்வியை அவரால் தடுக்க முடியாமல் போனது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.

சென்னை சுப்பர் கிங்ஸின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்ட மும்பை இண்டியன்ஸ், முன்வரிசை வீரர்கள் மூவரை சீரான இடைவெளியில் இழந்தது.

முன்னாள் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (0), ரெயான் ரிக்ல்டன் (13), வில் ஜெக்ஸ் (11) ஆகிய மூவரும் முதல் 5 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் (29), திலக் வர்மா (31) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

எனினும் மீண்டும் மும்பை இண்டியன்ஸின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்கின. பின்வரிசையில் திப்பக் சஹார் 15 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்று அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார்.

பந்துவீச்சில் நூர் அஹ்மத் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கலீல் அஹ்மத் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

156 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மும்பையைப் போன்றே சென்னையின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப வீரர் ராகுல் த்ரிபதி 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும், ரச்சின் ரவிந்த்ரா, அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகமூட்டினர்.

ஆனால், கய்க்வாட், ஷிவம் டுபே (9), தீப்பக் ஹூடா (3) ஆகிய மூவரும் அறிமுக வீரர் விக்னேஷ் புதூரின் பந்துவீச்சில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.