04.09.2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
01. நீர் முகாமைத்துவ தேவைகளை அவசர நிலைமையாகக் கருதி ஒருங்கிணைந்த அணுகுமுறையின் கீழ் நடவடிக்கைகளை எடுத்தல்
கடந்த காலங்களில் நிலவிய வரட்சியான காலநிலையால் நாடளாவிய ரீதியில் 17 மாவட்டங்களில் 70 பிரதேச செயலகப் பிரதேசங்களில் வசிக்கின்ற 84,000 குடும்பங்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளமையை, அனர்த்த நிவாரண நிலையம் 2023.08.22 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலைமையின் கீழ் நாட்டில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களில் போதியளவு நீர்க் கொள்ளளவை சேகரிக்கும் வரை தற்போது காணப்படுகின்ற நீர்க் கொள்ளளவை சிறந்த முறையில் பயன்படுத்தவும் மற்றும் முகாமைத்துவம் செய்யப்படவும் வேண்டியுள்ளது.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய நீர்வளக் கொள்கைக்கமைய குடிநீர் வழங்கலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதுடன், ஏனைய நீர்ப் பங்கீடுபாட்டாளர்களைப் பாதுகாப்பதற்கும் அரசுக்குப் பொறுப்புண்டு. அதற்கமைய போதியளவு மழைவீழ்ச்சி கிடைக்கும் வரைக்கும் குடிநீர் வழங்கலை அவசர மற்றும் முன்னுரிமைத் தேவையாக கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய நீர்வளக் கொள்கை மூலம் முன்மொழியப்பட்டுள்ள தேசிய நீர்வளச் சபையை அவசர செயற்குழுவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அரச உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள்: நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் ஒருங்கிணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவடையும் போதான முன்னேற்றங்கள்
நிரல் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட 202 பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவடையும் போது அடையப்பெற்ற முன்னேற்றங்கள் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பத்துள்ள அறிக்கையை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கடன் மீள்கட்டமைப்பு செயன்முறை முடிவடையும் வரை வெளிநாட்டு நிதியனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களுக்குரிய நிதியைப் பயன்படுத்த முடியாமை மற்றும் உள்ளூர் நிதி விடுவித்தலும் மட்டுப்படுத்தப்படுகின்றமையால் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவடையும் போது பல கருத்திட்டங்களின் முன்னேற்றம் எதிர்பார்க்கின்ற மட்டத்தை விடவும் கீழ்மட்டத்தில் காணப்படுகின்றமையை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.
அதற்கமைய, கடன் மீள்கட்டமைப்பு முடிவடைந்த பின்னர் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதற்கு இயலுமை கிட்டும் வரை தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற கருத்திட்டங்களில் அரசின் 2048 ஆம் ஆண்டு இலக்கை அடைவதற்கும், தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் ஒத்துழைப்புக்களை வழங்கக்கூடிய கருத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி 2024 ஆம் ஆண்டில் நிதியொதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
03. தொழில் வழிகாட்டல் மூலம் மூன்றாம் நிலைக் கல்வியை ஊக்குவித்தல்
க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையைப் பூர்த்தி செய்கின்ற மாணவர்கள் க.பொ.த (உயர் தரம்) கற்கைகளை ஆரம்பிக்கும் வரை அல்லது க.பொ.த (உயர் தரம்) பரீட்சையைப் பூர்த்தி செய்கின்ற மாணவர்கள் தொழிற்கல்வியைப் பயில்வதற்கு முன்னர் பாடசாலைகளில் தொழிற்கல்வியின் ஐந்து அடிப்படையான துறைகளை உள்ளடக்கும் வகையில் பாடத்துறையைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்ற வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. தொழிற்கல்விக்கான பொதுவான முக்கியமாக அமைகின்ற தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கில மொழியும் அதனுடன் இணையாக மென்திறன்களை விருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. முதலாவதாக, முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னோடிக் கருத்திட்டமாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துக் கோட்டக்கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 320 பாடசாலைகளில் 3-4 மாதகாலப்பகுதிக்கு நடைமுறைப்படுத்துவதற்கும், பின்னர் முன்னோடிக் கருத்திட்டத்தின் விளைவாக 2024 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த கருத்திட்டம் தேசிய வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தவும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான முத்துராஜவெலயில் அமைந்துள்ள காணித்துண்டுகள் சிலவற்றிலுள்ள ‘அணுகுவழி சேவக உரித்தை‘ இலங்கை மின்சார சபையின் நிலத்தடி குழாய்த் தொகுதிகளைப் பொருத்துவதற்காக குத்தகைக்கு வழங்கல்
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான முத்துராஜவெலயில் அமைந்துள்ள 69 ஏக்கர் காணித்துண்டில் 1997 ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபைக்கு விற்பனையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதுடன், அதிலொரு பகுதியில் யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் எஞ்சிய பகுதியில் தற்போது சொபதனவி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த மின்னுற்பத்தி நிலையத்திற்கான நிலத்தடி குளிரூட்டும் குழாய்த்தொகுதி மற்றும் நிலத்தடி எரிபொருள் குழாய்த்தொகுதியை நிர்மாணிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான முத்துராஜவெலயில் அமைந்துள்ள ஒருசில காணித்துண்டுகள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குறித்த காணித்துண்டுகளின் ‘அணுகுவழி சேவக உரித்து’ உபகுத்தகை வழங்கல் உரித்துடன் இலங்கை மின்சார சபைக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. கிருலப்பனை, டீ.எம்.கொலம்பகே மாவத்தையில் அமைந்துள்ள காணித் துண்டை வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன நலன்புரி மன்றத்திற்கு வழங்கல்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடாத்தப்படுகின்ற தேசிய மற்றும் சமய வைபவங்கள் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்காக தூரப்பிரதேசங்களிலிருந்து வருகை தருகின்ற தேரர்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக உத்தியோகபூர்வ துறவுமடமொன்றை நிர்மாணிப்பதற்குப் பொருத்தமான காணித்துண்டொன்றை வழங்குமாறு கண்டி அஸ்கிரிய மகாவிகாரையின் மகாநாயக்க தேரர் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்காக, கிருலப்பனை, டீ.எம்.கொலம்பகே மாவத்தையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 27 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்று அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குறித்த காணித்துண்டை பிக்குகள் துறவுமடமொன்றை நிர்மாணிப்பதற்காக வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன நலன்புரி மன்றத்திற்கு விடுவிப்பு வழங்கல் பத்திரத்தின் மூலம் ஒப்படைப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசு கொமரோசு ஒன்றியம் மற்றும் சாவோ தொமே மற்றும் பிறின்சிப்பி ஜனநாயக குடியரசுடன் இராஜதந்திர தொடர்புகளை நிறுவுதல்
ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 54 தன்னாதிக்க அரசுகள் ஆபிரிக்க வலயத்தில் காணப்படுகின்றன. அவற்றில் 46 நாடுகளுடன் இலங்கை இராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், மேலும் 06 நாடுகளின் உடன்பாடுகளை எதிர்பார்த்துள்ளது. அதற்கமைய, ஆபிரிக்க வலயத்தில் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள தீவுகளுடன் கூடிய கொமரோசு ஒன்றியம் மற்றும் கினியா வளைகுடாவில் அமைந்துள்ள ஆபிரிக்கத் தீவான தொமே மற்றும் பிறின்சிப்பி ஜனநாயக குடியரசுடன் இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. தொழிலுக்குப் புலம்பெயர்தல் பற்றிய தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டம் 2023-2027
இலங்கையின் புலம்பெயர் தொழில் பற்றிய முதலாவது கொள்கை தேசிய புலம்பெயர் தொழில் கொள்கையாக 2008 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த கொள்கை, குறித்த அமைச்சு, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள், கல்வியலாளர்கள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் அபிவிருத்திப் பங்குதாரர்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்கள் உள்ளிட்ட புலம்பெயர் தொழிற்றுறையில் அனைத்துத் தரப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து மீண்டும் மீளாய்வு செய்து, தொழிலுக்காகப் புலம்பெயர்தல் பற்றிய தேசிய இலங்கை தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டம் 2023-2027 வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கைச் சடடங்களுக்கு இணங்கியொழுகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டம் 2023-2027 இனை நடைமுறைப்படுத்துவதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை வகுத்தல்
இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்தித் தயாரிப்பின் போதும் மற்றும் பெற்றோல் அல்லது டீசல் பாவனையில் இயங்குகின்ற முச்சக்கர மோட்டார் ஊர்திகள் மின்சக்தியில் இயங்குவதற்கு இயலுமாகும் வகையில் மாற்றியமைக்கும் போது, அதற்காக இலத்திரன் ஏற்றப்பட்ட பற்றறிகள் பயன்படுத்தப்படுவதால், அவ்வாறான முச்சக்கர மோட்டார் ஊர்திகளின் வெறும் வாகன நிறை 500 கிலோக்கிராமை விஞ்சுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் மோட்டார் வாகனச் சட்டத்தின் பொருள்கோடலுக்கமைய மோட்டார் முச்சக்கர வண்டியின் வெறும் வாகன நிறை 500 கிலோக்கிராமும், வாகன மொத்த நிறை 1000 கிலோவை விஞ்சாத வகையில் இருத்தல் வேண்டும். அதற்கமைய, இலத்திரனியல் முச்சக்கர மோட்டார் ஊர்திகளைப் பதிவு செய்வதிலுள்ள தடைகளை நீக்கி மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்துவதற்காக 2022.08.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 1972 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வாடகைச் சட்டத்தை இரத்துச் செய்தல் மற்றும் குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தல்
காணி உரிமையாளர்கள் மற்றும் வாடகைக் குடியிருப்பாளர்களின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளைத் திட்டவட்டமாக நிர்ணயிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 1972 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வாடகைச் சட்டம் பல சந்தர்ப்பங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், குறித்த சட்டத்தின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாமை கண்டறியப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள வாடகைச் சட்டம் தொடர்பான ஆலோசனைக் குழு இதுபற்றிய விடயங்களை ஆராய்ந்துள்ளதுடன், அதற்கமைய வாடகைக் குடியிருப்பாளர் மற்றும் காணி உரிமையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த முன்மொழிவைக் கருத்தில் கொண்டு 1972 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வாடகைச் சட்டத்தை இரத்துச் செய்தல் மற்றும் குடியிருப்பாளர்களைப் பாதுகாத்தல் எனும் பெயரிலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி விவசாய ஊக்குவிப்புச் சட்டத்திற்கான திருத்தம்
சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் 1992 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஏற்றுமதி விவசாய ஊக்குவிப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலம்
இணையத்தளத்தின் ஊடாக இடம்பெறுகின்ற உண்மைக்குப் புறம்பான தகவல்கள் மற்றும் திட்டமிட்டு தீங்கிழைக்கும் நடத்தைகள் மூலம் இடம்பெறுகின்ற பாதிப்புக்களிலிருந்து பொதுச் சமூகத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இணையவழி முறைகளின் பாதுகாப்பு பற்றிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தின் ஐஐஐ ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கீழ்வரும் செயல்கள் இச்சட்டத்தின் ஏற்பாடுகள் மூலம் தண்டனைக்குரிய குற்றங்களாகப் பொருள்கோடல் செய்யப்பட்டுள்ளன.
• இலங்கைக்குள் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கதைகளைத் தொடர்பூட்டல்
• இழிவுபடுத்தலுக்கு ஏதுவாக அமைந்துள்ள உண்மைக்குப் புறம்பான கதைகளை வெளியிடல்
• உண்மைக்குப் புறம்பான தகவல்கள் மூலம் கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் வெறுமனே கோபமூட்டல்
• உண்மைக்குப் புறம்பான கூற்றுக்கள் மூலம் மதக் கூட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்தல்
• மத உணர்வுகளைப் புண்படுத்தும் உள்நோக்கில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை தொடர்பூட்டல்
• மத உணர்வுகளை நிந்தனை செய்யும் வகையில் திட்டமிட்டு தீங்கிழைக்கும் நோக்கில் உண்மைக்குப் புறம்பான கூற்றுக்களை தொடர்பூட்டல்
• மோசடி செய்தல்
ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்தல்
• அமைதியைக் குலைக்கும் நோக்கில் கோபமூட்டும் உள்நோக்கில் உண்மைக்குப் புறம்பான கூற்றுக்கள் மூலம் தீங்கிழைக்கும் உள்நோக்கில் நிந்தனை செய்தல்
• கிளர்ச்சியோ அல்லது அரசுக்கு எதிரான தவறொன்றை மேற்கொள்ளும் போது உள்நோக்கத்துடன் கூற்றொன்றை தொகுத்தல்
• தொல்லைகளை மேற்கொள்ளும் நோக்கில் சம்பவங்கள் பற்றிய கூற்றுக்களை தொடர்பூட்டல்
• சிறுவர் துஷ்பிரயோகம்
• தவறொன்றை மேற்கொள்வதற்காக நாடாக்குறிப்பு (Bot) தயாரித்தல் அல்லது மாற்றியமைத்தல்
அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பிள்ளர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக 2022.09.05 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அதற்கமைய குறித்த சட்டமூலம் 2023.03.22 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. பின்னர், ஆர்வலர்கள் பலர் (உள்ளூர் மற்றும் சர்வதேச) குறித்த சட்டமூலத்தில் ஒருசில பிரிவுகள் பற்றிக் கருத்துக்களை முன்வைத்திருந்தன. அதற்கமைய, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு மின்னியல் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக ஆர்வங்காட்டும் தரப்பினர்களை முறைசார்ந்த வகையில் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஒருசில தரப்பினர்களுடன் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார். அதற்கமைய, முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளையும் கருத்தில் கொண்டு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஆரம்ப சட்டமூலத்தை மீண்டும் திருத்தியமைத்து புதிய சட்டமூலத்தை சட்டவரைஞர் மூலம் தயாரிப்பதற்கான படிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் குறிப்பு:
தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள மொழியே மூலமாக அமையும்.