மாலைத்தீவுகள் ஜனாதிபதி தேர்தலில், சீனா ஆதரவு பெற்ற மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகமது மூயிஸ் வெற்றி பெற்றுள்ளார். இது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலிமையானவர் யார் என்ற போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தெற்காசிய நாடான மாலைத்தீவுகள் ஜனாதிபதி தேர்தல்,சமீபத்தில் நடந்தது. இதில், பதவிவகித்த ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் போட்டியிட்டனர்.
மக்கள் தேசிய காங்கிரசின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தலில் போட்டியிட அவருக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில்தான், மூயிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சரான இவர், மாலைத்தீவு மேயராகவும் இருந்துள்ளார்.
சீனாவுக்கு ஆதரவாக, மக்கள் தேசிய காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில், மிகவும் வலுவான நாடு இந்தியாவா, சீனாவா என்ற போட்டி உள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இப்ராஹிம் முகமது சோலிஹ், இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. மாலத்தீவுகளில், இந்திய கடற்படைக்கான தளம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தேர்தலில் வென்றுள்ள மூயிசுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.