சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பயனாளர்களின் தெரிவின் போது முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பயனாளர்களின் தெரிவின் போது முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்  என வழிவகைகள் பற்றிய குழுவில் வலியுறுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவிலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அஷ்வசும கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் இத்திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதற்காக 37 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாகவும், இவற்றில் உண்மையான தேவையுடையவர்களுக்கு இக்கொடுப்பனவு ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. சமுர்த்தி கொடுப்பனவைப் பெறுபவர்களில் 30 வீதமானவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் இல்லையென உலக வங்கி சுட்டிக்காட்டியிருப்பதாகவும், இதனைக் கவனத்தில் கொண்டு இத்திட்டத்தில் பயனாளிகளின் தெரிவு இடம்பெற வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

அஷ்வசும கொடுப்பனவுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தொடர்பில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருதடவை மதிப்பீடு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.

அதேநேரம், இதற்கு முன்னைய வாரம் நடைபெற்ற வழிவகைகள் பற்றிய குழுவில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக சுங்கத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சு என்பன அழைக்கப்பட்டிருந்தன. இதில் பாராளுமன்றத்தினால் கோரப்பட்ட அறிக்கைகளை நிதி அமைச்சு சமர்ப்பிக்காமை தொடர்பில் குழுவின் தலைவர் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

பாராளுமன்றத்தின் குழுவொன்றினால் அறிக்கைகள் மற்றும் யோசனைகள் கோரப்படும்போது உரிய காலப் பகுதிக்குள் அவற்றை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமாறு அக்குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இக்குழுவின் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வாசுதேவ நாணயக்கார, கௌரவ டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, கௌரவ வசந்த யாப்பா பண்டார, கௌரவ காமினி வலேபொட, கௌரவ அலி சப்ரி ரஹீம், கௌரவ எஸ்.எம்.எம் முஷாரப், கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன