ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் நிறுவனம் 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியியல் பெறுபேறுகளை அடைந்துள்ளது

  • ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் நிறுவனத்தின் வருடத்திற்கான மொத்த உரிமைகோரல் கொடுப்பனவு ரூபா 10.5 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
  • முழுமையாக எழுதப்பட்ட தவணைக்கட்டணம் ரூபா 25 பில்லியனாகப் பதிவுசெய்துள்ளது. இது 2023ஆம் ஆண்டிலிருந்து 9.45% வளர்ச்சியாகும்.
  • ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் நிறுவனம் வரிவிதிப்புக்கு முன்னராக இலாபமாக ரூபா 4 பில்லியன் சிறந்த பெறுபேற்றை அடைந்தது .
  • 19.4% சந்தைப் பங்குகள் மற்றும் 9% வளர்ச்சியுடன் சந்தையின் முன்னோடி.
  • ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் மோட்டார் பிளஸ் மோட்டார் காப்புறுதித் துறையில் முதலாவது ஸ்தானத்தை தன்வசம் வைத்துள்ளது.  

2025 ஏப்ரல் 4, கொழும்பு : ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் (SLICGL) நிறுவனம் 2024ஆம் ஆண்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியிருப்பதுடன், காப்புறுதித்துறை சந்தையின் முன்னணியாளர் என்ற ரீதியில் தனது பலத்தையும், விரிவாற்றலையும்  மீள உறுதிப்படுத்தியுள்ளது. SLICGL நிறுவனம் தனது நிலையான நிதி ஸ்திரத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் வரிவிதிப்புக்கு முன்னராக இலாபமாக ரூபா 4 பில்லியனைப் பதிவுசெய்திருப்பதுடன், வரிவிதிப்புக்குப் பின்னரான இலாபமாக ரூபா 3.3 பில்லியனைப் பதிவுசெய்துள்ளது. 2024டிசம்பர் 31ஆம் திகதியின் போது நிறுவனம் எழுதப்பட்ட தவணைக் கட்டணமாக ரூபா 25 பில்லியன் பதிவாகியிருப்பதுடன், அதன் சொத்து மதிப்பு ரூபா 51 பில்லியனாக விரிவாக்கப்பட்டிருப்பதன் மூலம் நிதிநிலைமை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் காப்புறுதிப் பிரிவில் ஸ்ரீ லங்கா மோட்டார் பிளஸ் காப்புறுதி 20% சந்தைப் பங்கை உறுதிப்படுத்தி ரூபா 14பில்லியனைத் தவணைக் கட்டண வருமானமாகப் பெற்றிருப்பதுடன், இலங்கையின் முதல் தரமான மோட்டார் காப்புறுதி வழங்குனர் என்ற தனது ஸ்தானத்தைத் தொடர்ச்சியாக ஆறாவது வருடமாகவும் நிலைநிறுத்தியுள்ளது. இந்தப் பிரிவு தொடர்ச்சியான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி 5.3% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. 

அதேநேரம், மோட்டார் அல்லாத பிரிவு தவணைக் கட்டண வருமானமாக ரூபா 11 பில்லியன் என்ற இலக்கை அடைந்திருப்பதுடன், 15% வளர்ச்சியைப் பதிவுசெய்து, இது இந்தப் பிரிவில் தொழில்துறை வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் நிறுவனம் 9 % வளர்ச்சியைப் பதிவு செய்து, 19.4% சந்தைப் பங்கைக் கொண்டு சந்தையின் முன்னோடியாகத் திகழ்கின்றது. இது, தொழில்துறையின் சராசரியை விஞ்சும் வகையில் அமைந்திருப்பதுடன், நிறுவனத்தின் பரந்துபட்ட காப்புறுதித் தயாரிப்புக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை என்பவற்றின் சிறப்பை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்துள்ளது. 

காப்புறுதி உரிமையாளர்களுக்கான அர்ப்பணிப்பை மீள் உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் ஜெனரல் நிறுவனம் 2024ஆம் ஆண்டில் ரூபா10.5 பில்லியன் உரிமைகோரல் கொடுப்பனவுகளை  வழங்கியிருப்பதுடன்,இது தனது கடமைகளை நிறைவேற்றி வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான பாதுகாப்பை வழங்குதில் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்த வலுவான செயற்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.சந்தன எல்.அலுத்கம குறிப்பிடுகையில், “நிறுவனம் 2024ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை விதிவிலக்கான சிறந்த செயற்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதுடன், காப்புறுதித் துறையின் முன்னோடி என்ற எமது ஸ்தானமும் இதன் மூலம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார சூழல் காணப்பட்டபோதும், எமது மூலோபாய நிலைப்புத்தன்மை, செயற்பாட்டுத் திறன் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை என்பன நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்த உதவியிருந்தன. காப்புறுதி உரிமையாளர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் எமது அணியினரின் அசைக்கமுடியாத அர்ப்பணிப்புக்கு முன்னுதாரணமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. இந்தப் பயணத்தில் நாம் தொடர்ந்து முன்நோக்கிச் செல்லும்போது எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு சிறந்த சேவையை வழங்க சேவைச் சிறப்பில் புதிய அளவுமட்டங்களை ஏற்படுத்துவதற்கும், புத்தாக்கங்கள் மற்றும் நிதிரீதியான பலத்தை உருவாக்குவதிலும் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்” என்றார்.

மேலும் விபரித்த ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸின் தலைவர் : “நிலைப்புத் தன்மை மற்றும் நீண்டகால மதிப்புருவாக்கத்தின் மீது நாம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் 2024 ஆம் ஆண்டில் SLICGL நிறுவனம் வெளிப்படுத்தியுள்ள சிறந்த செயற்திறன் பறைசாற்றியுள்ளது. மதிநுட்பமான இடர்முகாமைத்துவம், சந்தையைக் கைப்பற்றும் திறன் மற்றும் உயர்ந்த காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதில் உறுதியான கவனத்தைச் செலுத்துதல் போன்றவற்றின் ஊடாக தொழில்துறையில் ஏற்பட்ட சவால்களை நாங்கள் நம்பிக்கையுடன் சமாளித்துள்ளோம்.  நிறுவனத்தின் பலம் மற்றும் மூலோபாய நோக்கம் ஆகியவற்றின் பெறுமதியைப் பற்றிப் பேசும் அளவிற்கு சேவைச் சிறப்பை விஸ்தரித்திருப்பதுடன் இலாபத்தையும் எம்மால் பேண முடிந்துள்ளது. எதிர்காலத்தை நோக்கும்போது மேலும் வளர்ச்சியை நோக்கிச் செல்வதிலும், பங்குதாரர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும், இலங்கையின் காப்புறுதித் துறையின் எதிர்காலத்தைத் தொடர்ந்தும் முன்னிலைப் படுத்துவதிலும் நாம் உறுதியான ஸ்தானத்தில் இருக்கின்றோம்” என்றார்.

புத்தாக்கம் நிறைந்த, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகள் மற்றும் நிலைபேறான வளர்ச்சியைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லும் உறுதிப்பாட்டுடன் SLICGL நிறுவனம் புதிய ஆண்டில் காலடியெடுத்து வைத்துள்ளது. தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் மாறிவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதில் தொடர்ச்சியாகப் பரிணமிப்பதன் ஊடாக SLICGL நிறுவனம், பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியைத் தரக்கூடிய அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட காப்புறுதித் தயாரிப்புக்களை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. சேவைச் சிறப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டை விஸ்தரிப்பது போன்றவற்றின் ஊடாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வணிகச் செயற்பாடுகளுக்கு அப்பால், பொறுப்புவாய்ந்த கூட்டு நிறுவனம் என்ற ரீதியில் மக்கள் மற்றும் சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட முயற்சிகளில் சாதகமான தாக்கத்தைச் செலுத்துவதுடன், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அதேநேரம் புதிய அளவுமட்டங்களை உருவாக்குவதிலும் SLICGL நிறுவனம் ஆழ்ந்த உறுதிப்பாட்டுடன் உள்ளது.

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல் லிமிடட் பற்றி

பொதுக் காப்புறுதியில் ஆறு தசாப்தங்களுக்கு மேலான நிபுணத்துவத்துடன், மிகவும் மதிப்பு மிக்க மற்றும் அதிகமானவர்களின் அன்பைக் கொண்ட காப்புறுதி வர்த்தகநாமமாக SLICGL திகழ்கின்றது. உறுதியான நிதிநிலைமையின் ஒத்துழைப்புடன் விரிவான காப்புறுதித் தயாரிப்புக்களை வழங்குவதில் இது பெயர்பெற்றுள்ளது. பொதுக் காப்புறுதிச் சந்தையின் முன்னோடி என்ற ரீதியில் SLICGL நிறுவனம், அனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளுக்கும் தனிப்பயனாக்கக்கூடிய தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவை தரங்களை வழங்க அதன் விரிவான கிளை வலையமைப்பையும் அனுபவம் வாய்ந்த விற்பனைக் குழுவையும் கொண்டுள்ளது. மோட்டார், நெருப்பு மற்றும் பொறியியல், மருத்துவம், பொது விபத்து மற்றும் கடல்சார் விநியோகம் போன்ற பரந்துபட்ட துறைகளில் காப்புறுதித் தயாரிப்புக்கள் நாடு முழுவதிலும் உள்ள 200ற்கும் அதிகமான கிளை வலையமைப்புக்கள் மற்றும் வாடிக்கையாளர் மையங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன. Global Brand Awards விருதில் “வாடிக்கையாளர் திருப்திக்கான சிறந்த காப்புறுதிக் கம்பனி – இலங்கை 2024” விருதை SLICGL நிறுவனம் பெற்றுள்ளது. அரசாங்கத்துக்குச் சொந்தமான ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின் பொதுக் காப்புறுதிப் பிரிவான SLICGL நிறுவனம், விரைவான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு தயாராக  இருப்பதுடன், பாதுகாப்பில் தேசத்தின் முதலாவது தெரிவாகவும் தன்னை முன்னிறுத்தியுள்ளது.