வெளிநாட்டில்வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் முறைமையொன்றை அமைப்பது பற்றி ஆலோசனை

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு விசேடமான விசா வகையொன்றை உருவாக்குவதற்கான அவசியம் குறித்து சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (08) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

சார்க் பிராந்திய நாடுகள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் வெளிநாட்டுக் கொள்கை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு போன்ற சார்க் பிராந்திய நாடுகளுக்கு விசேடமான விசா வகையொன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என குழுவின் தலைவர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதன்காரணமாக, இந்த நாடுகளுக்கு இணக்கமான முறையில் விசா வழங்கும் முறையை தயாரிக்க குழு முன்மொழிவதாகத் தெரிவித்தார்.

மேலும், வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ள பல்வேறு திட்டங்களுக்கான உள்ளகப் பயிற்சிகளைத் (Internship Program) தொடங்குவதற்கான வழிமுறையைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துமாறு வெளிவிவகார அமைச்சுக்குக் குழு முன்மொழிந்தது. இதனால் அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும் வெளிநாட்டவர்களும் இணைந்து கொள்ள முடியும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.

சுற்றறிக்கையின் பிரகாரம், வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ளகப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தற்போதைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இந்த வேலைத்திட்டம் மிகவும் சம்பிரதாயமான முறையில் திறந்த வேலைத்திட்டமாக தயாரிக்கப்பட வேண்டுமென இந்தக் குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், பாராளுமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய பொறிமுறையொன்றைத் தயாரிக்கத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக வாக்களிப்பை பதிவு செய்யும் முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இதன் ஊடாக வாக்களிப்பில் பதிவு செய்ய முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, கௌரவ சபாநாயகருடன் கலந்தாலோசித்து இதற்கான அமைப்பை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் கீழ் பல விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ (பேராசிரியர்) ஜீ. எல். பீரிஸ், கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ சட்டத்தரணி எஸ். எம். எம். முஷாரப், கௌரவ அகில எல்லாவல, கெளரவ கோகிலா குணவர்தன, கௌரவ யதாமினி குணவர்தன, கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோர் கலந்து கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சந்திம வீரக்கொடி குழுவின் தலைவரின் அனுமதியுடன் இதில் கலந்து கொண்டார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன