விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக தேசிய விளையாட்டு கவுன்ஸில் தாயரித்துள்ள வேலைத்திட்டம்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் என்பன அண்மையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) முன்னிலையில் மீண்டும் அழைக்கப்பட்டன. இதற்கு முன்னர் 2023.09.06ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தபோது விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் என்பன உரிய தயார்ப்படுத்தலுடன் கோபா குழு முன்னிலையில் ஆஜராகவில்லையெனக் கூறி 2023.10.20ஆம் திகதி இவை மீண்டும் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டன.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் கூடியதுடன், இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம்  ஆகியவற்றின் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயப்பட்டது.

இதற்கு அமைய,விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுத் திட்டம் குறித்து விளக்கமளிக்குமாறு குழு கோரிக்கை விடுத்திருந்ததுடன், இதற்கான திட்டம் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் விளையாட்டுத் தொகுதிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், விளையாட்டின் வளர்ச்சிக்காக நிதியைப் பயன்படுத்துதல் மற்றும் அது தொடர்பான செயல்திறன் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு  அபிவிருத்தித் திணைக்களத்தினால் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுக்காக 4 பில்லியன் ரூபா வரையில் செலவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தத் திட்டங்கள் குறித்து எவ்வித சாத்தியக்கூற்று ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லையென்பதும் குழுவில் தெரியவந்தது.

விளையாட்டுத் தொடர்பான தரவுகளைப் பேணுவதற்காகத் தயாரிக்கப்பட்ட தரவுக் கணக்கெடுப்புக் கட்டமைப்புக் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்தத் தரவுக் கட்டமைப்பு விளையாட்டுத் துறை குறித்த தரவுகளைப் பேணுவதற்காக 2016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், இது தற்பொழுது சிறந்த செயற்பாட்டு நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அதன் முறையான செயல்பாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.

அத்துடன், தேசிய விளையாட்டு கவுன்சில் விளையாட்டின் அபிவிருத்திக்காகத் தயாரித்துள்ள வேலைத்திட்டம் மற்றும் எதிர்வரும் வருடங்களில் பதக்கங்கள் வெல்லக் கூடிய விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய தேசிய விளையாட்டு கவுன்சிலினால் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டம் குழுவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் பதக்கங்கள் வெல்ல முடியும் என எதிர்பார்க்கும் விளையாட்டுக்கள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.  தேசிய விளையாட்டு கவுன்சிலின் தலைவர் அர்ஜுன ரணதுங்க இங்கு குறிப்பிடுகையில், சுசந்திகா ஜயசிங்க மட்டத்திலான விளையாட்டு வீர வீராங்கனைகளை உருவாக்குவது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அது போன்று இரண்டு அல்லது ஐந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கு முடிந்தளவு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதவிர மாவட்ட அளவில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இக்குழு அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ வீரசுமண வீரசிங்க மற்றும் கௌரவ சஹான் பிரதீப் விதான ஆகியோர் கலந்துகொண்டனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன