வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. உத்தியோப்பற்றவகையில் இந்த விடயம் அமைச்சரவையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும் விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அமைசசரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வறட்சியினால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய முழுமையான அறிக்கையைத் தயாரிக்க ஒரு வாரத்திற்கும் அதிகமான காலம் எடுக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த அறிக்கையைத் தயாரிக்கத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
தற்சமயம் நிலவும் வறட்சியான காலநிலையினால் முழுமையாகவும் பகுதி அளவிலும் சேதமடைந்த வயல்களுக்கு இதன் மூலம் இழப்பீடு வழங்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்சமயம் நிலவும் வறட்சியான காலநிலையினால் 19 மாவட்டங்களில் உள்ள 32 ஆயிரத்து 815 ஏக்கர் நெற்காணிகள் சேதமடைந்திருக்கின்றன. இதில் கூடுதலான பாதிப்பு குருநாகல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.