நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை ஒரு பருவகால நிகழ்வு என்பதால் அதில் அரசியல் இலாபம் ஈட்ட எவரும் முயற்சிக்கக் கூடாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள 13 மாவட்டங்களில் 50,535 குடும்பங்களைச் சேர்ந்த 166,904 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அந்தந்த மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புடன் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் நன்றி தெரிவித்தார்.
காலநிலையில் ஏற்படும் பருவகால மாற்றங்களினால் நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுகிறது மேலும் எதிர்வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் பருவ மழையுடன் நிலைமை மேம்படும்.
பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு, நீர்ப்பாசன அமைச்சு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, விவசாய அமைச்சு, கமநல அபிவிருத்தி திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மகாவலி அதிகாரசபை, மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுடன் நாங்கள் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இந்தப் பிரச்சினையில் எவ்வாறு கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். நீர் வழங்கல் மற்றும் நீர்பாசன தேவைகளை சமாளிக்க திறமையான நீர் மேலாண்மையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மனிதனால் ஏற்படும் பேரழிவுகள் குறித்து விளக்கமளித்த இராஜாங்க அமைச்சர், நாட்டின் பல பகுதிகளில் இருந்து இதுவரை 58 காட்டுத் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை மனித நடவடிக்கைகளால் ஏற்படுவதாகவும் கூறினார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றார்.