நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு இன்று (29) காலவகாசம் வழங்கியுள்ளது.
வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மறிச்சுக்கட்டி மற்றும் கரடிக்குளி வனப்பகுதியை அழித்தமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கே நீதிமன்றம் இவ்வாறு கால அவகாசம் .வழங்கியது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன் ,அவரது சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா, நீதிமன்றில் சமா்ப்பணங்களை முன்வைத்து மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய ஆட்சேபனைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவிட்டது