மகாவலிஅதிகாரசபையின்கணக்காய்வாளர்நாயகத்தின்அறிக்கை கோப்குழுவின்மீளாய்வுக்குஉட்படுத்தப்பட்டது

மகாவலி அதிகாரசபையின் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் கோப் குழுவின் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டது

மகாவலி அதிகாரசபையின் சேவைகளை வினைத்திறனுடனும் தரத்துடனும் செய்யத் தவறியதன் காரணமாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார அவர்கள் அந்த அதிகார சபையின் காலாவதியான ‘பணிக் கூற்று’ மற்றும் பிரதான செயல்திறன் குறிகாட்டிகள் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“பிரஜைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்” அதிகார சபையின் நோக்குக்கு அமைய பிரதான நோக்கமாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது இடம்பெற்றாமை தொடர்பில் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே குழுவின் தலைவர் அதிருப்தியை வெளியிட்டார். அதற்கமைய, மகாவலி அதிகார சபையின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் சரிபார்க்கப்பட்டு நவீன உலகுக்குப் பொருந்தும் வகையில் பணி மற்றும் நோக்கு என்பவற்றை மீண்டும் தயாரிக்குமாறு அவர் மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதேபோன்று, அதிகார சபையினால் காணிகளை ஒதுக்கும் செயன்முறையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தாமை தொடர்பில் விரிவாக வினவியதுடன் அதனை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

காணிகளை உரிமை மாற்றுதல் தொடர்பில் பின்வரும் விடயங்களை முன்வைக்குமாறு குழு அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியது.

தற்போது காணப்படும் காணிகளின் உரிமை மாற்றுதல் செயன்முறை தொடர்பில் 02 வாரங்களில் சமர்ப்பித்தல்

முதலீட்டு நோக்கங்களுக்காக முன்வைக்கப்படும் காணிகளில் முதலீடு மேற்கொள்பவர்கள் விபரங்கள், முதலீட்டின் நோக்கம், பின்பற்றப்பட்ட நடைமுறை உள்ளிட்ட முழுமையான அறிக்கையை 02 வாரங்களுக்குள் சமர்ப்பித்தல்

அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் இடம்பெறும் சட்டவிரோதமான நிர்மாணங்கள் தொடர்பில் 01 மாதத்தில் அறிக்கை சமர்ப்பித்தல்

மகாவலி அதிகார சபையின் 2022 ஆண்டுக்கான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டறிக்கை மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அலுவலகத்தினால் கண்காணிக்கப்பட்ட தரவுகளுக்குமிடையில் முரண்பாடு உள்ளதால் குறித்த ஆண்டில் விடுவிக்கப்பட்ட அனைத்து காணிகள் தொடர்பிலும் அறிக்கையொன்றை விரைவாக வழங்குமாறும் இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டது. அந்தக் காணிகளை விடுவிப்பதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதியும் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.

அதிகார சபையின் ஆட்சேர்ப்பு நடைமுறை இதன்போது பரிசீலிக்கப்பட்டதுடன், தற்போதுள்ள உள்ளக பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக, நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதில் தாமதம் நிலவுவதாக இத்துன்போது அவதானிக்கப்பட்டது. அதற்கமைய, இந்த வெற்றிடங்களை 60 நாட்களுக்குள் நிரப்புவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவின் தலைவர் பணிப்புரை வழங்கினார்

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வாக்கும்புர, கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ ஜகத்குமார சுமித்ராறச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ எம். ராமேஸ்வரன், கௌரவ ராஜிக்க விக்ரமசிங்க, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்)  சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன