போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து 68 மில்லியன் ரூபா வங்கி கடன்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.10.19ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) அரச ஈட்டு முதலீட்டு வங்கி அழைக்கப்பட்டிருந்தது.

இதில் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் 2020, 2021ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை என்பன ஆராயப்பட்டன. இதில் நிதி அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர், பொது முகாமையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இக்கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டன.

முழுமையாக தனியங்கி வங்கிக் கட்டமைப்பை நிறுவுவதில் தாமதம்

இதற்கு முன்னர் நடைபெற்ற கோப் குழுவில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய முழுமையாகத் தானியங்கி வங்கிக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் 2024ஆம் ஆண்டு யூலை மாதம் இதனைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

போட்டித் தன்மை நிறைந்த வங்கியாகச் செயற்படுவதற்கான அவசியம்

வங்கியின் சொத்துக்களை அதிகரிப்பதற்கும் மேம்பட்ட நிலையை அடைவதற்கும் வணிக மட்டத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. வங்கியின் பிரதான நோக்கங்களில் இருந்து முற்றாக விலகாமல், போட்டித் தன்மை நிறைந்த வங்கியாகப் பொதுமக்களுடன் நெருக்கமாக இருந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். அதன்படி, வங்கியின் நாமத்தைப் பொதுமக்கள் மத்தியில் புதுமையான மற்றும் கவர்ச்சிகரமான முறையில் (மறுபெயரிடுதல்) ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

போலியான ஆவணங்களை சமர்ப்பித்துக் கடன் பெற்றமையால் 68 மில்லியன் ரூபா நட்டம்

2017ஆம் ஆண்டு, சிலர் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து கடன்களைப் பெற்றதன் காரணமாக, வங்கிக்கு ஏற்பட்ட 68 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஈடுசெய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. வங்கியில் பணியாற்றிய சில அதிகாரிகளின் உதவியுடன் கடன்களுக்கு விண்ணப்பித்த 49 பேருக்கு உரிய கடன் தொகையை கொடுத்து இந்த மோசடி இடம்பெற்றுள்ளமையும் இங்கு வெளிப்பட்டது. சட்டரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பலனாக 8 மில்லியன் ரூபா கிடைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள தொகையைப் பெற்றுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் இடம்பெற்று  6 வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதிகாரிகள் தண்டிக்கப்படாததுடன், இந்தப் பணத்தை மீட்பதில் காலதாமதம் ஏற்படுவது குறித்தும் குழு விசேட கவனம் செலுத்தியது. இந்த விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையளிக்குமாறு கோப் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

செயற்படாத கடன் விகிதத்தை உயர்ந்த மட்டத்தில் பேணவும்

வங்கியின் செயற்படாத கடன்  விகிதத்தின் சராசரி மதிப்பைவிட,10 கிளைகள் அதிக செயல்படாத கடன் விகிதத்தை பதிவு செய்திருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்பதால், நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு கடனை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இக்குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன