இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு, தற்போது அந்நிய நாட்டுக்கு சொந்தமாக உள்ளது.அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தார் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமக்கு கடிதம் எழுதி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.
மணிப்பூர் விவகாரத்தில், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலளித்து உரையயாற்றினார்.
கடவுள் ஆசியால் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததாக தெரிவித்த இந்திய பிரதமர் ,தேசத்தை விட கட்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறினார்.
சில எதிர்க்கட்சிகள் நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான, உள்நோக்கத்துடன் கூடிய பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United Progressive Alliance) புதைக்கப்பட்டுவிட்டது. பெயரை மாற்றினால் மட்டும் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றுவிட முடியாது. எதிர்கட்சிகளின் தூண்டுதல்கள் தோல்வியடைந்துவிட்டன என்றும் தெரிவித்தார்.
மணிப்பூர் தொடர்பாக பிரதமர் பேசாததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, தொடர்ந்து பேசிய மோடி, ” வெளிநடப்பு செய்தவர்களிடம் கேளுங்கள் கச்சத்தீவு என்றால் என்ன? அது எங்கே அமைந்துள்ளது? தமிழ்நாடு முதல்வர் கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என்று எனக்கு கடிதம் எழுதுகிறார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு , தற்போது அந்நிய நாட்டுக்கு சொந்தமாக உள்ளது. இது, பாரத மாதாவின் ஒரு பகுதி இல்லையா? அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, கச்சத்தீவை இலங்கைக்கு இலங்கைக்கு ஒப்பந்தம் மூலம் கொடுத்தார் என்றும் கூறினார்.
திமுக கட்சியை தாக்கி பேசிய அவர், ” இந்தியா எனில் வட இந்தியா என்கிறார் திமுக அமைச்சர். தமிழ்நாடு இந்தியாவின் அங்கமில்லையா? ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர். அப்துல் கலாம் ஆகியோர் பிறந்த தமிழ்நாட்டை எப்படி பிரித்து பார்க்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.