நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளிக்காத அரச அதிகாரிகள் – கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்

மீனவர்களின் பெருமையைப் பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு கடற்றொழில் அமைச்சு பாரிய பங்களிப்புகளை வழங்கி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்காத அரச அதிகாரிகள் தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும், 2048 இல் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அனைவரும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்,

2048 ஆம் ஆண்டளவில் முன்னேறிய இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சு என்ற வகையில், கடற்றொழில் அமைச்சுக்கும் அதிகளவான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இலக்குகளை அடைவதற்காக கடற்றொழில் அமைச்சு கடந்த வருடத்தில் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மீனவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களின் நலனுக்காக விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. மீனவ சமுதாயத்தின் நலனுக்காக மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு காப்புறுதித் திட்டம், ஓய்வூதியம், சேமிப்புத் திட்டங்கள் போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது மீன்பிடித்துறை அமைச்சு மக்களுக்கு நெருக்கமான பணிகளை முன்னெடுத்துவரும் அதேநேரம், இதுவரையில் காணப்பட்ட பாரம்பரிய வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக அமைச்சின் இணை நிறுவனங்களுடன் கைகோர்த்து பெருமளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுத்து வருகிறது.

மீனவக் குடும்பங்களின் மத்தியில் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “திரிய தீவர அம்மா” வேலைத்திட்டம் சிறந்ததாகும். மது போதையிலிருந்து விடுபடுவது தொடர்பிலான பரந்த கலந்துரையாடல் ஒன்றை இதனால் ஏற்படுத்த முடிந்தது.

கடந்த காலங்களின் மீன் விலை அதிகரித்தமையால் நுகர்வோர் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர். மீன் விலை அதிகரிப்புக்கு காலநிலை மாற்றங்களும் காரணமாக அமைந்திருந்தது. அதேபோல் சில வழிபாட்டு நிகழ்வுகள் காரணமாகவும் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடவில்லை. அதனால் போதியளவு மீன்கள் சந்தைக்கு கிடைக்கவில்லை.

சில அதிகாரிகள் தங்களது பொறுப்புகளை சரியாகச் செய்தாலும், சில அதிகாரிகள் அமைச்சின் வேலைத்திட்டங்கள் பற்றிய தெளிவில்லாமல் செயற்பாடுகிறார்கள். அது கவலைக்குரிய நிலைமையாகும். 2048 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் சாத்தியமடைய வேண்டும் எனில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை சாத்தியமாக்குவதற்காக எமது அமைச்சு அர்பணிப்புடன் செயற்படும்.

அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும், இராஜாங்க அமைச்சர் வகையில் நானும் நாட்டிற்கும் மீனவச் சமூகத்தின் மீது அன்புகொண்ட அதிகாரிகள் குழுவுடன் பணிகளை முன்னெடுத்து வருகிறோம் என்ற வகையில் எனக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள அமைச்சு பெரும் பங்களிப்பை வழங்கி வருவதோடு, எதிர்காலச் சவால்களுக்கு ஈடுகொடுக்க கூடிய வகையிலும் தயார்படுத்தப்பட்டுள்ளது.

பெருமளவான அதிகாரிகள் பொறுப்புடன் பணியாற்றும் போது சிலர் அவர்களை காலை பிடித்து இழுக்கும் நிலைமை காணப்படுகிறது. அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல தடையாகவிருக்கும் அதிகாரிகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அந்த தீர்மானத்தை எடுக்காவிடின் மீன்பிடித்துறை சரிவைச் சந்திக்கும். சரிவை சந்திக்கும் பட்சத்தில் அதனை சீரமைக்க நீண்ட காலம் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.