இலங்கை நனோ தொழிநுட்ப நிறுவனத்தினால் நனோ தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி விருத்தி செய்யப்பட்டுள்ள நனோ யூரியா எனப்படு ‘HA – Urea’ பெயரிலான உரத்தைப் பயன்படுத்துவதனால் பரிந்துரைக்கப்பட்ட யூரியா உர அளவை 25% – 50% வரை குறைத்துக்கொள்ள முடியும் எனவும், விளைச்சலை 10% அதிகரிக்க முடியும் எனவும் நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிருவனம் (RRDI) மற்றும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (TRI) என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை நனோ தொழிநுட்ப நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க தலைமையில் 2023.06.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இலங்கை விவசாயத் திணைக்களம், தேசிய உர செயலகம், இலங்கை கட்டளைகள் நிறுவனம், தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவகம் மற்றும் இலங்கை நனோ தொழிநுட்ப நிறுவனம் என்பன இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தன.
இதற்கு 3 ஆகவுரிமைப் பத்திரங்கள் மற்றும் தேசிய உர செயலகத்தினால் உற்பத்தி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நனோ யூரியாவை வணிகரீதியாக உற்பத்தி செய்வதற்குத் தேவையான தரக்கட்டளைகளை உருவாக்குதல், சந்தைப்படுத்தல் அனுமதி மற்றும் பரிந்துறை வழங்கும் செயற்பாடுகளை சம்பந்தப்பட்ட நிறுவங்களினால் விரைவாக மேற்கொள்ளுமாறு இதன்போது குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
தேசிய அடிப்படைக் கற்கைகள் நிறுவகத்தினால் மண் வளத்தைப் பேணுவதற்கும் பயிர் ஊட்டச்சத்து முகாமைத்துவத்துக்கு மண்ணின் நுண்ணுயிர் செயல்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டதுடன், அந்நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உயிர்ப்படலம், உயிரியல் உரம் பயன்பாட்டின் மூலம் விளைச்சலை 20% – 30% வரை அதிகரித்துக்கொள்ள முடியும் என இதன்போது வெளிப்படுத்தப்பட்டது. தற்பொழுது தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உற்பத்தி செய்யப்படும் இந்த உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அத்துடன், இந்த உரங்களின் பாவனையால் இரசாயன உரங்களின் அளவு குறைவதோடு விளைச்சலும் அதிகரித்துள்ளதாகவும் இதன் மூலம் நாட்டுக்குப் பொருளாதார ரீதியாக சுமார் 10 பில்லியன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் இயற்கை உரங்களுக்காகக் காணப்படும் தரக்கட்டளைகள் மற்றும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு இயற்கை உரங்கள் தொடர்பில் புதிய கொள்கைகளை பரிந்துரைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தற்பொழுது 06 வகையான இயற்கை உரங்களுக்கு தரக்கட்டளைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக உயிரியல் உரங்களுக்கு தரக்கட்டளைகளைத் தயாரித்து தேசிய தரக்கட்டளையாக ஜூன் மாத இறுதியில் பிரகடனப்படுத்த முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை விவசாயத் திணைக்களத்தினால் விதைகளுக்கான தரங்கள் மற்றும் விலைகளை நிர்ணயிக்கும் போது விதைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது விவசாயத் திணைக்களத்தின் குழுவொன்றின் ஊடாக அவ்வப்போது விதைகளின் விலையை நிர்ணயித்து வெளியிடுதல், விதைகளின் விற்பனை விலையை ஒழுங்குபடுத்தும் முறைமையை தனியார் துறையின் பங்களிப்புடன் தயாரித்தல், விதை உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு காப்புறுதியொன்றை ஏற்படுத்துதல் போன்ற முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், விவசாயத் திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 29 விதைப் பண்ணைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டதுடன், பண்ணை நிலங்களில் மிகவும் வினைத்திறனாக மற்றும் உரிய நேரத்தில் பயிரிடுதல் தொடர்பான முன்மொழிவுகள் பற்றியும் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த, துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கோவிந்தன் கருணாகரம், கௌரவ மிலான் ஜயதிலக்க, கௌரவ சுதத் மஞ்சுள மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தேனுக விதானகமே, கௌரவ ஜயந்த கெடகொட, கௌரவ மதுர விதானகே, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ இசுறு தொடங்கொட மற்றும் கௌரவ மொஹமட் முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்டனர்.