தொழிற்சந்தைக்கு ஏற்றவாறு புதிய பாடத்திட்டங்களைத் தொடங்குவதற்குப் பரிந்துரை

பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ ரஞ்சித் பண்டார தலைமையில் 2023.08.09 ஆம் திகதி கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை அழைக்கப்பட்டிருந்ததுடன், இதில் 2023 மார்ச் 23 மற்றும் 2023 மே 09ஆம் திகதி நடைபெற்ற கோப் குழுக் கூட்டங்களில் வழங்கப்படட பரிந்துரைகைள நடைமுறைப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆய்வுசெய்யப்பட்டன.

கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) பிரசன்ன ரணசிங்க உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலர் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபைக்குக் கடந்த கோப் கூட்டங்களில் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்துக் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே கோப் குழுவின் தலைவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனையடுத்துக் கீழ்வரும் விடயங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டன.

அதிகாரசபையின் கூட்டுத் திட்டம்

அதிகாரசபையின் கூட்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கான பூர்வாங்க செயலமர்வை நடாத்தி, 2023-2027ஆம் ஆண்டிற்கான கூட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கு பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.

பணிப்பாளர் நாயகம் உட்பட பிற பதவிகளில் வெற்றிடங்கள்

அதிகாரசபையில் வெற்றிடமாக உள்ள பணிப்பாளர் நாயகத்தின் பதவியை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நேர்காணல் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளதாகவும்  இங்கு தெரியவந்தது. மேலும், ஆட்சேர்ப்புகளை அங்கீகரிக்கும் அதிகாரம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், எஞ்சியுள்ள 6 முக்கிய வெற்றிடங்கள் மற்றும் இதர வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

தொழிற்சந்தையை இலக்குவைத்து மாணவர்களை இணைத்துக்கொள்ளல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு இவ்வருடம் 35,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார். அதை மேம்படுத்துவதற்கான முறையான திட்டத்தை தயார் செய்து ஏற்கனவே திறமையான தொழிலாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

தென் கொரியா, ஓமான் மற்றும் பிற நாடுகளின்  தொழில்த் தேவைக்கு ஏற்ப பணியாற்றுவதாகவும், தொழில்த் தேவை அதிகம் உள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்துவதாகவும் அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் தற்போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  ஏறத்தாழ 2000 திறமையான பணியாளர்களின் தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது.

பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்திக்கொண்ட இளைஞர்களை முறையான தொழில் பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தைக் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.  கல்வி அமைச்சினால் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான முன்னோடிச் செயற்திட்டம் அண்மையில் கண்டி தர்மராஜா கல்லூரியில் இடம்பெற்றதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தொழிற்சந்தைக்கு  ஏற்றவாறு புதிய பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் குழுவில் பரிந்துரைக்கப்பட்டது.

பாடநெறி பயிற்றுவிப்பாளர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகள்

இந்த நிறுவனங்கள் திறைசேரியால் பராமரிக்கப்படுவதற்குப் பதிலாக சுய வருவாய் ஈட்டக்கூடியதாக மாற வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது. (Fee Levying system) மேலும், ஆலோசகர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லாததால், ஆலோசகர்கள் சேவையை விட்டு வெளியேறுவது போன்ற பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, பின்வரும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டன.

  • ஆலோசகர்களின் சம்பளத்தை அதிகரித்து, அதற்குத் தகுதியானவர்களை ஈர்க்க நடவடிக்கை எடுத்தல்
  • பயிற்றுவிப்பாளர்களின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரசபையின் ஊடாகப்  பாடநெறிகள் மூலம் சேகரிக்கப்படும் பணத்தைப் பயன்படுத்துதல் (Fee Levying system)
  • ஆலோசகர்களைப் பயிற்றுவிப்பதற்கும் அவர்களுக்கு சில தொழில்முறைத் தகுதிகளை வழங்குவதற்கும் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்தல்

ஆலோசகர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்தாலோசித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோப் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, கௌரவ மேஜர் சுதர்சன் தெனிபிட்டிய, கௌரவ ராஜிகா விக்கிரமசிங்க, கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன