சிறையில் உள்ள எனது கணவர் கொலை செய்யப்படலாம் என அச்சம் உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபி தெரிவித்துள்ளார்
இம்ரான் கான் தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
இந்த நிலையில், இம்ரான் கானின் மனைவி சிறையில் உள்ள தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். அட்டாக் சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என கூறி உள்ளார்.
இது குறித்து அவர் பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். ‘எந்தவித நியாயமும் இல்லாமல் எனது கணவர் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டத்தின்படி, என் கணவரை அடியாலா சிறைக்கு மாற்றப்பட வேண்டும்.
எனது கணவர் மீது கடந்த காலங்களில் இரண்டு படுகொலை முயற்சிகள் நடந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரது உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது. நாட்டின் முன்னாள் பிரதமர் என்பதால், எனது கணவர், வீட்டில் சமைத்த உணவை சிறையில் சாப்பிட அனுமதிக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் இம்ரான் கானின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.