சிறுவர்கள் மத்தியில் போதைப் பாவனை அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி கவிரத்ன தலைமையில் அண்மையில் கூடிய பாராளுமன்ற  சிறுவர் ஒன்றியத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கான இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி, இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பில் பாடசாலை மாணவர்களை முதற்கட்டமாகத் தெளிவூட்டும் வேலைத்திட்டத்தைப் நவீன ஊடகங்களின் ஊடாக ஒன்லைன் முறையில் முதற்கட்டமாக முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக ஒன்றியத்தில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் திட்டத்தை ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்க ஒன்றியம் விரும்புவதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகள் மற்றும் குழுக்களுக்கு சிறந்த புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.

சிறுவர்கள் மத்தியில் போதைப் பாவனை அதிகரித்துள்ளமை மற்றும் சிறுவர்களின் உரிமைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் தமது அக்கறைகளை வெளிப்படுத்தக் கூடிய புகார் பெட்டிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தியிருப்பதாக ஒன்றியம் தெரிவித்தது. 1929 விசேட தொலைபேசி இலக்க சேவை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. சைபர் பாதுகாப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு அதிகாரிகள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒன்லைன் ஊடாக சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துன்புறுத்தல்கள் குறித்தும் ஒன்றியம் கவனம் செலுத்தியதுடன், இவற்றைத் தடுப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியது. பாலியல் தொடர்பான இணையப்பக்கங்கள் மற்றும் முகப்புத்தகப் பக்கங்கள் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கொண்ட பின்னூட்டங்கள் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் குறித்து வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் நெறிமுறையற்ற வகையிலும் உணர்வற்ற வகையிலும் பதிவாகி வருவதால் முறையான ஊடகக் கொள்கையின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தின் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ வேலு குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) வீ.இராதாகிருஷ்ணன், கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ தலதா அதுகோரள ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன