கிரிக்கட் நிர்வாக சபை கலைக்கப்பட்டது – மக்களின் ஆதரவு 

விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கட் இடைக்கால குழுவை நியமித்தமை சரியா தவறா என்பதை ஆராய அமைச்சரவையில் எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கிரிக்கட் நிர்வாக சபை கலைக்கப்பட்டதற்கு மக்கள் ஆதரவு இருப்பதை தான் ஒப்புக்கொள்கிறேன் என்று அமைச்சர் கூறுகிறார். அத்துடன், கலாநிதி என்.எம்.பெரேரா முதல் பல அரசியல்வாதிகள் இந்நாட்டின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு தம்மை அர்ப்பணித்துள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றம் இன்று (7) பிரதி சபாநாயகர் திரு.அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு நடந்த உரையாடல் பின்வருமாறு:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – இலங்கை கிரிக்கட் குறித்து இன்று காலை நான் கருத்து வெளியிட்டேன். தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு விதிக்கப்பபட்டுள்ளது. கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இலங்கை கிரிக்கட்டுக்கு இப்படி பயணிக்க முடியாதல்லவா? இந்த அரசாங்கத்திற்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒரு பக்கத்தில் இழுத்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு தீர்மானத்தை மேற்கொள்கிறார். அந்த அதிகாரம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உள்ளது. அதற்கு அமைவாகவே அவர் செயற்படுகின்றார். இடைக்கால குழுவுக்குள் பிரச்சினைகள் காணப்படலாம். அது வேறு கதை. ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டப்படி நடந்துள்ளார். இப்படி இருந்தால் எதிர்காலத்தில் கிரிக்கட்டை எமது நாட்டில் எப்படி கொண்டு செல்ல முடியும்? இது குறித்து எங்களுக்கு ஒரு அறிக்கை தேவை. விளையாட்டுத்துறை அமைச்சர் பாராளுமன்றத்திற்கு வந்து இது குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும். ஜனாதிபதி நேற்று அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளார். அந்த விளையாட்டுத்துறை அமைச்சரின் முடிவு சரியா தவறா என்று பாருங்கள். இது நகைச்சுவையானது. நானும் ஒரு கிரிக்கட் வீரர்தான். கிரிக்கெட் மீது எங்களுக்கு அலாதி பிரியம். இதனை ஜனாதிபதியும் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாட்டுக்கு கூற வேண்டும். எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் 225 பேரும் ஒன்றிணைந்து ஒரு நிலைப்பாட்டுக்கு அமைவாக கிரிக்கட்டை முன் கொண்டு செல்வதற்காக இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவோம். முதலாவதாக கிரிக்கட்டுக்குள் அரசியல் இல்லாது செய்யப்பட வேண்டும்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ – இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அறிவிப்பேன்.

ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, எதிர்கட்சித் தலைவர் அவர்கள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஒரு தீர்மானம் குறித்துப் பேசினார். அந்த நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி நான் பேசவில்லை. கிரிக்கட் நிர்வாக சபை கலைக்கப்படுவதற்கு மக்கள் ஆதரவு இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கிரிக்கட் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்களைப் பற்றி நாங்கள் பேசவில்லை. இது குறித்து அமைச்சரவை கூட்டத்திலும் உரையாடப்பட்டது. இது குறித்து ஜனாதிபதியும் அமைச்சரும் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்றார். மற்றபடி அமைச்சர் எடுத்த முடிவு சரியா தவறா என்பதை கண்டறிய எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை.

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர்கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (S.J.B) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, நான் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் சிறிது காலம் இருந்தேன். விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இடைக்கால நிர்வாகக் குழுவை நியமிக்க அமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளது. வேறு யாராலும் முடியாது. அமைச்சராக இடைக்கால குழுவையும் நியமித்தேன். இடைக்கால குழு பணியாற்றிய போது நாங்கள் சம்பியன் பட்டத்தை வென்றோம். இலங்கை கிரிக்கட்டில் அரசியல்வாதிகள் தலையிடுவதாக இன்று சர்வதேச சமூகம் கூறுகின்றது. அர்ஜுனவால் மட்டுமே கிரிக்கட்டை மீளக் கட்டி எழுப்ப முடியும். மக்கள் அதனை நம்புகிறார்கள். இந்த இடைக்கால குழு குறித்து ஆராய நேற்று அமைச்சரவை தனி குழுவை நியமித்தது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ – கௌரவ அமைச்சர் இது குறித்து விளக்கம் அளித்தார். இனி இதை நிறுத்துவோம். இல்லாவிட்டால் நாடாளுமன்றம் கிரிக்கட் நிர்வாக சபை போல் மாறிவிடும்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர்அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ.) – கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் பேசுகிறேன். இந்த நாட்டில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்க உங்கள் தந்தை பெரும் பணி செய்தார். கிரிக்கட்டை இந்த நிலைக்கு கொண்டு வர அமைச்சர் காமினி திஸாநாயக்க பெரும் தியாகத்தை செய்தார். இங்கு தவறு அரசியல் தலையீடு அல்ல. தவறானவர்களை பதவியில் அமர்த்துவதுதான் தவறு. கலாநிதி என்.எம்.பெரேரா காலத்திலிருந்து பல அரசியல்வாதிகள் விளையாட்டைக் காப்பாற்ற தியாகங்களைச் செய்தனர். ஆனால் உலகக் கோப்பைக்குப் பிறகு நாட்டில் பணம் புழங்கத் தொடங்கியபோது, சூதாட்டக்காரர்கள், திருடர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் விளையாட்டிற்குள் வந்தனர். நானும் அங்கு இருந்ததால் மற்ற திருட்டுகள் பற்றி எனக்கு தெரியும். இன்று நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு அரசு எடுத்த முடிவு அல்ல.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன